பிரேமலதா விஜயகாந்த், எடப்பாடி பழனிசாமி pt web
தமிழ்நாடு

“ராஜ்யசபா சீட் கொடுக்குறம்னு வாக்குறுதி கொடுத்தோமா?” இபிஎஸ் கொடுத்த ஷாக்.. தேமுதிக மேல் விழுந்த இடி!

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவிற்கு ராஜ்யசபா எம்பி பதவி ஒதுக்கப்படும் நிலையில், நாங்கள் சொன்னோமா? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அங்கேஷ்வர்

சேலம் மாவட்டம் ஆத்தூரில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் வழங்குவதாக அதிமுக கூறியதா? யார் யாரோ சொல்வதை வைத்துக்கொண்டெல்லாம் எங்களைக் கேட்காதீர்கள். தேர்தல் அறிக்கையில் நாங்கள் எதாவது சொன்னோமா?” எனக் கேள்வி எழுப்பினார்.

முன்னதாக, நடிகர் விஜயகாந்தின் ரசிகர் மன்றத்திற்கென தனிக்கொடி அறிமுகப்படுத்தப்பட்டு 25 ஆண்டுகள் முடிவடைந்த வெள்ளி விழா சில தினங்களுக்கு முன் தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “அதிமுகவுடன் கூட்டணி அமைத்தபோதே கையெழுத்திடப்பட்டு, உறுதி செய்யப்பட்டதுதான் ராஜ்யசபா பதவி. ராஜ்யசபா தேர்தலுக்கான நாள் வரும் போது, தேமுதிக சார்பாக யார் ராஜ்யசபா செல்ல உள்ளார்கள் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்” என பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்திருந்தார். அந்த உறுப்பினர் பதவி நிச்சயமாக தேமுதிகவின் துணைப் பொதுச்செயலாளர் சுதீஷுக்குத்தான் என தேமுதிக நிர்வாகிகள் உற்சாகத்தில் இருந்தனர்.

இந்நிலையில், தேமுதிகவின் எண்ணத்தில் மிகப்பெரிய இடியை இறக்கினார் எடப்பாடி பழனிசாமி. ஆத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் வழங்குவதாக அதிமுக கூறியதா? யார் யாரோ சொல்வதை வைத்துக் கொண்டெல்லாம் எங்களைக் கேட்காதீர்கள். தேர்தல் அறிக்கையில் நாங்கள் எதாவது சொன்னோமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் தேமுதிக இருந்திருந்தாலும் கூட, 2021 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக கேட்ட தொகுதிகளை அதிமுக ஒதுக்காததன் காரணமாக கூட்டணியில் இருந்து வெளியேறியது. பின் அமமுக உடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தது தேமுதிக. பின், 2023 ஆம் ஆண்டு மீண்டும் அதிமுக - தேமுதிக கூட்டணி அமைந்தது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 4 இடங்கள் என முதலில் பேசப்பட்ட நிலையில், பாமக அதிமுக கூட்டணியில் இடம்பெறாத நிலையில், தேமுதிகவிற்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டது. அதற்கான ஒப்பந்தம் 2024 மார்ச் 20 ஆம் தேதி கையெழுத்தானது.

நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி ஒப்பந்தத்திலேயே தங்களுக்கு ஒரு ராஜ்யசபா உறுதிசெய்யப்பட்டதாக தேமுதிக தரப்பில் கூறப்பட்டு வந்தாலும், அதிமுக வெளியிட்ட அறிக்கைகளில் எவ்வித குறிப்பும் இடம்பெறவில்லை. தொகுதி உடன்பாடு தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கைகளிலும் 5 நாடாளுமன்ற தொகுதிகள் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது அதிமுக - பாமக உடனான தொகுதி ஒப்பந்தத்தில் 6+1 என்று குறிப்பிட்டே இரு தரப்பும் கையெழுத்திட்டிருந்தது. ஆனால், 2024 நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக உடனான ஒப்பந்தத்தில் அதுகுறித்தான எந்த தகவலும் இடம்பெறவில்லை. அதேசமயத்தில், பேச்சுவார்த்தையின் மூலம் உடன்பாடு எட்டப்பட்டதாக தேமுதிக தரப்பில் தொடர்ச்சியாகக் கூறப்பட்டு வந்தது.

ADMK

ஆனால், இன்றைய செய்தியாளர் சந்திப்பில் நாங்கள் எப்போது சொன்னோம் என இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக பேசிய மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன், “ஒப்பந்தத்தில் எழுத்துப்பூர்வமாக ஏதேனும் இருக்கிறதா என்பதை பிரேமலதாதான் உறுதிப்படுத்த வேண்டும். இப்பிரச்னைகளின் காரணமாக அதிமுக இருக்கும் அணியில் தேமுதிக செல்வதற்கான வாய்ப்புகள் குறைவாகக் காணப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.