பெரியார் குறித்து தொடர்ச்சியாக எதிர்மறைக் கருத்துகளை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிவருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தில் மே 17 உள்ளிட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் ஈடுபட்டனர்.
இந்த நிகவுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் பெரியார் பேசியது தவறுதான் என்று மீண்டும் கூறியுள்ளார். பெரியாரைப் பற்றி இனிதான் பேச ஆரம்பிக்கப்போகிறேன் என்றும் மொத்த பெரியாரிஸ்டுகளும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் விடுதலைப் புலிகள் பிரபாகரனையும் பெரியாரையும் ஒப்பிட்ட அவர், நீங்கள் பெரியாரைப் பேசுங்கள், நான் பிரபாகரனை பேசுகிறேன். பெரியார் ஒன்றும் செய்யவில்லை என்று பேசுகிறேன். மக்கள் முடிவு செய்யட்டும் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சீமானை விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “சீமான் பிரபாகரனைப் பற்றி பேசுகிறார். பிரபாகரனைப் பற்றி உனக்குத் தெரியுமா? 1983க்கு முன்பாக பிரபாகரன் சென்னைக்கு வருகிறார். தியாகராய நகரில் அவருக்கும் இன்னொரு அணிக்கும் துப்பாக்கிச்சூடு நடக்கிறது. பிரபாகரன் கைது செய்யப்படுகிறார்.
சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்படுகிறார். அவர் கைது செய்யப்பட்டபோது அவருக்கு யாரும் ஆதரவு கிடையாது. காரணம் சென்னைக்கு வந்திருக்கிறார். ஜாமீன் கொடுக்க யாரும் கிடையாது. என்னிடம் பிரபாகரன் கோர்ட்டுக்கு வருகிறார் என கலைஞர் சொன்னார். அப்போது நான் சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளராக இருக்கின்றேன். அப்போது கலைஞர் என்னை அழைத்து விடுதலைப் புலிகள் பிரபாகரனை ரிமாண்டுக்கு கொண்டு வருகிறார்கள். அந்தப் பிரபாகரனை எப்படியாவது நீ ஜாமீனில் எடுக்க வேண்டும் என சொன்னார்.
நான் பெயில் பெட்டிசன் போடுகிறேன். ஆனால், யாராவது உத்தரவாதம் கொடுக்க வேண்டுமே, உள்ளூர்க்காரர் கொடுத்தால்தானே ஜாமீன் கொடுப்பார்கள், நான் முயற்சி செய்கிறேன் என சொன்னேன்.
அது எப்படியோ தெரியாது, பிரபாகரன் ஜெயிலுக்குப் போகக்கூடாது என கலைஞர் உறுதியாக சொன்னார். அப்போது எம்ஜிஆருடைய ஆட்சி. அந்த நேரத்தில் ரிமாண்டுக்கு கொண்டு வருகிறபோது, நீதிமன்றத்தில் பிரபாகரனுக்காக ஆஜர் ஆகியவன் திமுகவைச் சேர்ந்த இந்த ஆர் எஸ் பாரதி. நீதிபதியிடம் அவரை சொந்த ஜாமீனில் வெளியிட வேண்டும் என சொல்லி வாதாடி அவரை ஜாமீனில் எடுத்துவிட்ட அடுத்த நாள் அவர் இங்கிருந்து சென்றுவிட்டார். அந்த பிரபாகரனை கலைஞர் சொல்லி பெயிலில் எடுத்தது நான். நீ (சீமான்) அந்த பிரபாகரனது பெயரைச் சொல்லி ஏமாற்றுகிறாய்” எனப் பேசினார்.