சம்போ செந்தில் கூட்டாளிகள்  முகநூல்
தமிழ்நாடு

திருந்தி வாழ வாய்ப்பு கேட்டு காவல் ஆணையரிடம் மனு அளித்த சம்போ செந்தில் கூட்டாளிகள் இருவர்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளிகள் திருந்தி வாழப்போவதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு.

ஜெ.அன்பரசன்

இனி குற்றச்சம்பவங்களில் ஈடுபடாமல், மனைவி செய்யக்கூடிய தொழிலில் ஈடுபட்டு மீதமுள்ள வாழ்க்கையை நடத்த முடிவு செய்துள்ளதாக ரவுடிகள் பரபரப்பு பேட்டி.

பிரபல ரவுடியான சம்போ செந்திலின் நண்பர்களான பழைய பல்லாவரத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் யுவராஜ் (எ) எலி யுவராஜ் மற்றும் ஈசா (எ) ஈஸ்வரன் ஆகியோர் திருந்தி வாழப்போவதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

சம்போ செந்திலின் நெருங்கிய கூட்டாளிகளும் சரித்திர பதிவேடு குற்றவாளிகளுமான எலி யுவராஜ் மற்றும் ஈசா ஆகியோர் மீது சென்னையில் பல்வேறு காவல் நிலையங்களில் 5 கொலை வழக்குகள், கொலை முயற்சி வழக்குகள், வெடிகுண்டு வழக்குகள் என பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த 2020ஆம் ஆண்டு, ஈசா (எ) ஈஸ்வரன் மற்றும் எலி யுவராஜ் (எ) யுவராஜ் ஆகியோரின் ஏற்பாட்டின் அடிப்படையில்தான், அண்ணா சாலையில் சிடி மணி மற்றும் காக்கா தோப்பு பாலாஜி (சமீபத்தில் என்கவுண்டர் செய்யப்பட்டார்) சென்ற கார் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு நடத்தப்பட்டது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு பிறகு கடந்த ஜூலை மாதம் சென்னை திருவொற்றியூரை சேர்ந்த கார்த்திக் என்ற ஒப்பந்ததாரரை மிரட்டி மாமுல் வசூல் செய்த விவகாரத்தில் எலி யுவராஜ் மற்றும் ஈஷா (எ) ஈஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறை சென்ற பிறகு கடந்த புதன்கிழமையன்று ஜாமினில் வெளியே வந்தனர்.

ஜாமீனில் வெளியே வந்த இருவரும் நேற்று நேரடியாக திருந்தி வாழப் போவதாக கூறி காவல் ஆணையர் அருணை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் ஈசா தனது குழந்தை மரபணு குறைப்பாட்டுடன் பிறந்தது தனக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக ரவுடி ஈசா குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் ரவுடிகளான யுவராஜ் மற்றும் ஈசா செய்தியாளர்களை சந்தித்தனர்.

யுவராஜ் மற்றும் ஈசா.

ரவுடி யுவராஜ் பேசுகையில், “தொடர்ச்சியாக போலீசாருக்கு பயந்தும், சிறை தண்டனை கால் உடைப்பு என்றும் வாழ்ந்து வருவதால் குடும்பத்துடன் இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் எங்கள் மீது இருந்த ஐந்து கொலை வழக்குகளில் இரண்டில் விடுதலை ஆகி மூன்று வழக்குகளில் சரியாக ஆஜராகி வருகிறோம். இனி எந்தவிதமும் குற்ற செயல்களிலும் ஈடுபடாமல் இருக்க முடிவு செய்துள்ளோம். கடந்த 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகேவும் நாங்கள் எந்த வித குற்ற செயல்களிலும் ஈடுபடாமல் இருக்கிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பேசிய ரவுடி ஈசா என்கிற ஈஸ்வரன்., ”எங்களுடன் முன் விரோதமாக இருக்கக்கூடிய அனைத்து நபர்களிடமும் நாங்கள் பேசி புரிய வைத்துள்ளோம். இதன் பிறகு சரியாக நீதிமன்றத்தில் கையெழுத்திடுவேன். எனது மனைவி ஆன்லைனில் செய்து வரும் டிரை பிஷ் என்ற தொழிலை கவனிக்க உள்ளேன்” என்று தெரிவித்தார்.

மேலும், சம்போ செந்தில் தனது வழக்கை எடுத்து நடத்தி வந்ததாகவும் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் சம்போ செந்திலுக்கும் தங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.