பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு - தவெக தலைவர் விஜய் புதிய தலைமுறை
தமிழ்நாடு

பரந்தூர் பறக்கும் தவெக தலைவர் விஜய்... அனுமதியோடு காவல்துறையினர் விதித்த கட்டுப்பாடுகள்! முழு விவரம்

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினரை சந்திக்க தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றை இங்கே விரிவாக காணலாம்...

PT WEB

செய்தியாளர்: இஸ்மாயில்

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. குறிப்பாக நெல்வாய் நாகப்பட்டு, ஏகனாபுரம், தண்டலம் மற்றும் மகாதேவி மங்கலம் ஆகிய கிராமங்களில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கையகப்படுத்தப்பட உள்ளன.

இதனால் விமான நிலையம் அமைக்க கூடாது என ஏகனாபுரம், நாகப்பட்டு, தண்டலம் ஆகிய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் போராட்டத்தை பொருட்படுத்தாமல் தொடர்ந்து திட்டத்தை செயல்படுத்தும் பணியில் அரசு சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த திட்டத்தால் அதிகம் பாதிக்கப்படும் ஏகனாபுரம் கிராம மக்கள், கடந்த 900 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பரந்தூர் விமான நிலையம்

இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் மாநாடு நடைபெற்ற போது (கடந்த அக்டோபரில்) பரந்தூர் விமான நிலையம் போராட்டக் குழுவினருக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் “விவசாயிகளை பாதிக்கும் விமான நிலைய திட்டங்கள் கூடாது” என்று விஜய் தெரிவித்திருந்தார். அந்த தீர்மானத்திற்குப்பின் பரந்தூர் விவகாரத்தில் விஜய் எதுவும் சொல்லாமல் இருந்து வந்தார்.

இதற்கிடையே கட்சி துவங்கியதிலிருந்து களத்திற்கு வரவில்லை என்று விஜய் மீது தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. நலத்திட்ட உதவிகள் கூட பனையூர் அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்டு கொடுக்கப்பட்டது மற்ற கட்சியினரால் அதிகம் விமர்சிக்கப்பட்டு வந்தது.

இவற்றைத்தொடர்ந்து, “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடிவரும் போராட்ட குழுவினர் மற்றும் கிராம மக்களை சந்தித்து ஆதரவு தர உள்ளார்; அதற்கு அனுமதி வேண்டும்” என காஞ்சிபுரம் காவல்துறையிடம் கட்சியினர் அனுமதி கேட்டிருந்தனர். இந்த நிலையில் போராட்டக் குழுவினரை விஜய் சந்திக்க உள்ள இடம் தற்போது வேகமாக தயாராகி வருகிறது. தயாராகி வரும் இடத்திற்கு நேற்று கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் பரந்தூரில் இருக்கக்கூடிய தனியார் திருமண மண்டபத்தையும் போராட்டக் குழுவினருடன் சென்று பார்வையிட்டனர்.

பரந்தூர் மக்கள் - தவெக தலைவர் விஜய்

இதன் பிறகு “விஜய் ஜனவரி 20ஆம் வருவதற்கு பாதுகாப்பு மற்றும் அனுமதி அளித்துள்ளோம்” என காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். ஏகனாபுரம் கிராமம் அருகே அம்பேத்கர் திடல் பகுதியில் பிரச்சார வேன் மூலம் ஏகனாபுரம் கிராம மக்களிடம் மற்றும் பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு போராட்டக் குழுவினரிடம் விஜய் உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு முதல் முறையாக மக்களை நேரடியாக களத்திற்கு சென்று சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய் மக்களை சந்திப்பதில், காவல்துறை தரப்பில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவை,

  • “அனுமதியளித்த இடத்தில் மட்டும்தான் மக்களை விஜய் சந்திக்க வேண்டும்

  • அதிக கூட்டம் கூட்டாமல் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையிலான நபர்களே வர வேண்டும்

  • அனுமதிக்கப்பட்ட வாகனத்தில், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில்தான் வர வேண்டும்

  • எந்த இடத்தில் விஜய் மக்களை சந்திக்க உள்ளார் என்பது குறித்து இன்று மாலை முடிவெடுக்கப்படும்; அங்கு குறிப்பிட்ட நேரத்தில்தான் மக்களை விஜய் சந்தித்து முடிக்க வேண்டும்”

என்பனவாகும்.