ஓ.பன்னீர்செல்வம், விஜய் Pt web
தமிழ்நாடு

விஜய் பக்கம் செல்லும் முக்கிய ஆளுமை.. தனித்துவிடப்படும் ஓபிஎஸ்? - முக்கிய தகவலும் முழுவிபரமும்!

முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் தலைமையில் இயங்கும் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுவிலிருந்து ஏற்கெனவே பல முன்னணி நிர்வாகிகள் வெளியேறியிருக்கும் நிலையில், தற்போது மேலும் ஒரு நிர்வாகி வெளியேறிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரா.செந்தில் கரிகாலன்

முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் தலைமையில் இயங்கும் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுவிலிருந்து ஏற்கெனவே பல முன்னணி நிர்வாகிகள் வெளியேறியிருக்கும் நிலையில், தற்போது மேலும் ஒரு நிர்வாகி வெளியேறிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விலகியிருப்பவர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. நடப்பது என்ன?..,விரிவாகப் பார்ப்போம்..,

நடந்தது என்ன?

ஓபிஎஸ்-இபிஎஸ்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் இரட்டைத் தலைமைகளான ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே எம்எல்ஏ சீட்டு கொடுப்பது, முதல்வர் வேட்பாளர், எதிர்க்கட்சித் தலைவர், அவைத் தலைவர், உட்கட்சி நிர்வாகிகள் நியமனம் என பல்வேறு விஷயங்களில் மோதல் போக்கு நீடித்து வந்தது. இறுதியாக, இரண்டு ராஜ்யசபா எம்பி இடங்களை யாருக்கு கொடுப்பது என்கிற விவகாரத்தில் ஓபிஎஸ்க்கும் இபிஎஸ்க்கும் இடையே மிகப்பெரிய மோதல் வெடித்தது. அது ஒற்றைத் தலைமையை நோக்கிக் கொண்டு சென்றது.

கடந்த 2022 ஆண்டு ஜூன் மாதத்தில் அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமியைக் கொண்டுவரப் பல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. அதை எதிர்த்து நீதிமன்றத்திற்கு சென்றார் ஓபிஎஸ். தொடர்ந்து, கட்சியில் இருந்து ஓபிஎஸ் உள்ளிட்ட பலர் நீக்கப்பட்டனர். அப்போது, ஓபிஎஸ் தலைமையில் ஒரு தனி அணி உருவானது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்கிற பெயரிலேயே ஓ.பி.எஸ் அறிக்கைகளை வெளியிட்டார். ஓபிஎஸ் அணியில், முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம் பண்ருட்டி ராமச்சந்திரன், கு.ப. கிருஷ்ணன் போன்றோரும் மனோஜ் பாண்டியன், ஐயப்பன், ஜேசிடி பிரபாகர், பெங்களூர் புகழேந்தி, மருது அழகுராஜ் உள்ளிட்ட பலரும் இணைந்து ஓபிஎஸ் அணியில் முன்னணி நிர்வாகிகளாகச் செயல்பட்டனர். தவிர, மாநிலம் முழுவதும் நிர்வாகிகளையும் நியமனம் செய்தார் ஓ.பி.எஸ்.

நாங்கள்தான் அதிமுக

இபிஎஸ் vs ஓபிஎஸ்

இது ஒருபுறமிருக்க, உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணயம் என அனைத்து தரப்பிலும் இபிஎஸ்க்கு ஆதரவாக தீர்ப்புகள் வர அதிகாரப்பூர்வமான ஒற்றைத் தலைமையாக அதிமுகவின் பொது செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி. தொடர்ந்து, ‘நாங்கள்தான் அதிமுக’ என செயல்பட்டு வந்த ஓபிஎஸ் அதிமுக கொடி, கரைவேட்டி உள்ளிட்டவற்றை பயன்படுத்தக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற அமைப்பை, கடந்த 2023 மார்ச் மாதம் தொடங்கினார் ஓ.பி.எஸ்.., தொடர்ச்சியாக சில கூட்டங்களையும் நடத்தினர்.

இதற்கிடையில் 2024 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் ராமநாதபுரத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அப்போதே உரிமை மீட்புக் குழுவுக்கும், பாஜகவுடன் ஓபிஎஸ் கூட்டணி அமைத்துள்ளதற்கும் இடையே எவ்விதமான சம்பந்தமுமில்லை என முன்னாள் அமைச்சரும் மீட்புக் குழு வின் துணை ஒருங்கிணைப்பாளரான கு.ப.கிருஷ்ணன் கருத்துத் தெரிவித்தார். ஆனால், உரிமை மீட்புக் குழுவில் இருந்து படிப்படியாக ஒதுங்கிக்கொண்டார்.

இதனையடுத்து ஜேசிடி பிரபாகரும், பெங்களூர் புகழேந்தியும் முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமியுடன் இணைந்து அதிமுக ஒருங்கிணைப்புக் குழு என்கிற குழுவை உருவாக்கி தனியாகச் செயல்பட்டு வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான இரட்டை இலை சின்னம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதனால், ஓ.பி.எஸ் தரப்பு சற்றே குஷியாகியிருக்கிறது.

ஓபிஎஸ் அணியிலிருந்து மருது அழகுராஜ் விலகுகிறாரா?

Marudu Alaguraj

இந்நிலையில், ஒ.பி.எஸ் அணியில் இருந்து, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவந்த, மருது அழகுராஜ் தற்போது ஓ.பி.எஸ் அணியிலிருந்து விலகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தவிர, விஜய்க்கு ஆதரவாக மிகத்தீவிரமாக கருத்துத் தெரிவித்துவரும் மருது அழகுராஜ், தவெகவில் இணைய பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

யார் இந்த மருது அழகுராஜ்?

எழுத்தாற்றல் மிக்கவரான மருது அழகுராஜ், 1998-ல் அதிமுகவில் இணைந்து 2004 வரை பயணித்துவந்தார். பின்னர், தேமுதிகவில் இணைந்த மருது அழகுராஜ், 2006 தேர்தலில், தேமுதிக சார்பில், திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்றார். பின்னர், 2009-ல் மீண்டும் அதிமுகவில் இணைந்த அவர், அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் வெடிக்கும் வரை அங்குதான் இருந்தார். அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான, நமது எம்.ஜி.ஆர் நாளிதழின் ஆசிரியராகப் பணியாற்றி வந்த மருது அழகுராஜ், ஜெயலலிதாவின் பல முக்கியமான உரைகளையும் தயாரித்துக்கொடுத்தவர்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, இ.பி.எஸ்- ஓ.பி.எஸ்ஸால் உருவாக்கப்பட்ட நமது அம்மாவின் ஆசிரியராகவும் விளங்கினார் மருது அழகுராஜ். 2021 தேர்தலில், திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். பின்னர், ஒற்றைத்தலைமை விவகாரத்தில், ஓ.பி.எஸ் ஓரங்கட்டப்பட, ஆவேசமான மருது அழகுராஜ் நமது எம்.ஜி.ஆர் ஆசிரியர் பணியை உதறியதோடு, ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவாக மிகத் தீவிரமான கருத்துக்களைத் தெரிவித்து வந்தார்.

ஓ.பி.எஸ்ஸால் உருவாக்கப்பட்ட நமது புரட்சித்தொண்டன் இதழின் ஆசிரியராகவும் செயல்பட்டு வந்தார்.

இந்தநிலையில், கடந்த சில மாதங்களாக, அதிருப்தியில் இருந்துவந்த மருது அழகுராஜ், தற்போது முழுவதுமாக ஓ.பி.எஸ் அணியில் இருந்து வெளியேறிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. நேற்று சென்னையில் நடந்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் ஆலோசனை கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை. தவிர, தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக மிகத் தீவிரமாக கருத்துத் தெரிவித்து வருகிறார்.

விஜய்

“புரட்சித் தலைவரை ‘வாத்யாரே’ என்றும் புரட்சித் தலைவியை ‘அம்மா’ என்றும் அழைத்து நெகிழ்ந்து மகிழ்ந்த ஏழை எளிய சனங்கள் விஜய்யை ‘அண்ணா வா அன்னைத் தமிழ் மண்ணை ஆள வா’ என அழைக்கும் காலம் தொடங்கி விட்டது..” எனத் தனக்கே உரிய பாணியில் விஜய் புகழ்பாடி வருகிறார். மிக விரைவில் அவர் தவெகவில் இணையவிருப்பதாகச் சொல்லப்படுகிறது..