பாஜகவின் தேசிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும்போது, கூடவே தேசிய அளவிலான நிர்வாகிகள் மாற்றமும் நடக்கும். அப்போது கட்சியின் தேசிய பொதுச்செயலராக அண்ணாமலை தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிவிக்கின்றன டெல்லி தலைமையக வட்டாரங்கள்.
தமிழக பாஜகவின் தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை அகன்ற பிறகு, ‘கட்சியின் விசுவாசமான காரியகர்த்தா’ என்று சொல்லியபடியே வலம் வந்தபடி இருக்கிறார். அடுத்து அண்ணாமலை சார்ந்து என்ன திட்டத்தை மோடி-ஷா வைத்திருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு பாஜகவினர் மத்தியில் இருந்துவந்தது. முக்கியமாக இரண்டு வாய்ப்புகள் பேசப்பட்டன. முதலாவது, ராஜ்ய சபை உறுப்பினர் வாய்ப்பு; கூடவே மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு. இரண்டாவது, கட்சிப் பதவி – தேசிய பொதுச்செயலர் வாய்ப்பு!
மோடி-ஷா தற்போது இரண்டாவது வாய்ப்பையே அண்ணாமலைக்கு வழங்க முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதிரடியான பேச்சுகளுக்கு அறியப்பட்டவர் அண்ணாமலை என்பதால், அவர் தலைவராக இருந்த காலகட்டம் முழுவதும் பாஜக மக்கள் மத்தியில் பேச்சிலேயே இருந்தது. ஆனால், அதிமுக அண்ணாமலையை விரும்பவில்லை. பாஜக – அதிமுக கூட்டணிக்கு பழனிசாமி விதித்த முக்கியமான நிபந்தனை “தலைவர் பதவியில் அண்ணாமலை நீடித்தால் கூட்டணி உருவாக முடியாது” என்பதே! சரியாக பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கான காலக்கெடுவும் முடிந்த காலகட்டம் அது என்பதால், அதிமுகவுடனான உறவை சீரமைக்கும் முடிவை பாஜக எடுத்தது.
ஆனால், பிரம்மாண்டமான திமுக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்றால், மெகா கூட்டணி ஒன்றை அதிமுக - பாஜக அமைக்க வேண்டும்; அதற்கு கூட்டணி ஆட்சி எனும் உத்தியைக் கையில் எடுக்க வேண்டும் என்று எண்ணுகிறார் அமித் ஷா. ஆனால், பழனிசாமி இந்த விஷயத்தில் பிடி கொடுக்க மறுக்கிறார். மேலும், பாஜக கூட்டணியைவிட தவெகவுடனான கூட்டணி மீதே அதிக விருப்பத்தை வெளிப்படுத்துகின்றனர் அதிமுக தொண்டர்கள். இத்தகு சூழலில், அதிமுகவின் சமீபத்திய பேச்சுகள் கடைசி கட்டத்தில் பழனிசாமி தவெகவுடனான கூட்டணி நோக்கி நகர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை எனும் பேச்சை உருவாக்கியுள்ளன.
ஆகையால், பாஜகவும் மாற்று ஏற்பாட்டுக்கு தயாராக இருக்க வேண்டும் என்று எண்ணுவதாக சொல்லப்படுகிறது. கூட்டணி விஷயம் எப்படியாக இருந்தாலும், தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு எதிராக உரக்கப் பேச அண்ணாமலையை கட்சி சார்ந்து களம் இறக்குவது முக்கியம் என்று தேசிய தலைமை எண்ணுகிறது. தவிர, தமிழ், கன்னடம், இந்தி என்று பல மொழிகளிலும் புழங்கக்கூடியவர் அண்ணாமலை என்பதால், கட்சி பணியில் அவரை ஈடுபடுத்தினால் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அவருடைய பேச்சை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் மோடி-ஷா திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இத்தகு பின்னணியில்தான் பாஜக தேசிய பொதுச்செயலர் பதவி அண்ணாமலைக்கு வழங்கப்படலாம் என்ற பேச்சு உருவாகியுள்ளது. ஆகஸ்டில் தேசிய தலைவர் யார் என்று அறிவிக்கப்படும்போது அண்ணாமலை பதவி தொடர்பான அறிவிப்பும் வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது!