ENGvIND | CSK வீரருக்கு வாய்ப்பு.. அர்ஷ்தீப் சிங் Ruled Out..!
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது. வெற்றிக்கு 193 ரன்களே தேவையாக இருந்த நிலையில் இந்தியாவே வெற்றிபெறப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்தியாவின் டாப் ஆர்டர் வீரர்கள் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் நல்ல வாய்ப்பை இழந்த இந்திய அணி 1-2 என தொடரில் பின்தங்கியுள்ளது.
இந்த சூழலில் தொடரை 2-2 என சமன் செய்யும் முயற்சியில் இந்திய அணி 4வது போட்டியில் களமிறங்கவுள்ளது. அணிக்குள் இருக்கும் காயங்கள் இந்தியாவிற்கு பின்னடைவாக இருக்கும் அபாயம் இருந்துவந்த நிலையில், சிஎஸ்கே பந்துவீச்சாளரை களமிறக்க திட்டம் தீட்டியுள்ளது இந்திய அணி.
அர்ஷ்தீப் சிங் காயம்.. அன்ஷுல் கம்போஜ் IN!
4வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பும்ரா காயம், ரிஷப் பண்ட் காயம் போன்றவற்றால் கவலையில் இருந்த இந்தியா, தற்போது இந்திய வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஏற்பட்ட காயத்தால் பின்னடைவை சந்தித்துள்ளது. வலைப்பயிற்சியின் போது ஏற்பட்ட காயத்தால் அர்ஷ்தீப் சிங் மீதமிருக்கும் போட்டிகளிலிருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ரிஷப் பண்ட்டிற்கு காயம் இருந்தாலும் அவர் விளையாடுவார் என்று துணை பயிற்சியாளர் தெரிவித்த நிலையில், பும்ராவும் 4வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ஆகாஷ் தீப்புக்கு ஓய்வளிக்கப்பட்டு சிஎஸ்கே பந்துவீச்சாளரான அன்ஷுல் கம்போஜ் அணிக்குள் சேர்க்கப்படவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சிஎஸ்கே வீரரான அன்ஷுல் கம்போஜ் 26 சராசரியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். அதுமட்டுமில்லாமல் புதிய பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தி சிறந்த தொடக்கத்தை கொடுத்திருந்தார். அவரை அணிக்குள் எடுக்காதது ஏற்கெனவே விமர்சனத்தை பெற்றிருந்த நிலையில், தற்போது அவரை அணிக்குள் எடுக்கும் முடிவை தேர்வுக்குழு செய்துள்ளது.
இரண்டு அணிகளுக்கும் இடையேயான 4வது டெஸ்ட் போட்டி ஜுலை 23-ம் தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது.