சென்னை மணலியில் 20.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி காவல் ஆணையர் உத்தரவின்படி தீவிர கண்காணிப்பில் இருந்த போலீசார், எம்.எஃப்.எல். சந்திப்பு பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்ற உதயவாணனை பிடித்து சோதனை செய்ததில், அவரிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன. பழைய குற்றவாளி எனவும் தெரியவந்தது.
ஆவடி காவல் ஆணையாளர் டி. செந்தில்குமார் உத்தரவின்படி, இணை காவல் ஆணையாளர் சிவக்குமார், செங்குன்றம் காவல் துணை ஆணையாளர் மகேஸ்வரி ஆகியோரின் அறிவுரையிலும், மணலி சரக காவல் உதவி ஆணையாளர் விவேக்கண்ணன் மேற்பார்வையிலும், M6 மணலி காவல் நிலைய போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மணலி எம்.எஃப்.எல். சந்திப்பு பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த உதயவாணன் (51), என்பவரை பிடித்து சோதனை செய்ததில், அவரிடமிருந்து சுமார் 20.500 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில், எண்ணூரைச் சேர்ந்த சகிலா என்பவருடன் ஆந்திர மாநிலம் விஜயவாடா சென்று கஞ்சா வாங்கி வந்தது தெரியவந்தது. மேலும், உதயவாணன் ஏற்கனவே கஞ்சா விற்பனை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, உதயவாணன் மீது M6 மணலி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார். மேலும், தலைமறைவாக உள்ள சகிலாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.