செய்தியாளர்: செல்வக்கண்ணன்
இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கான போர் உச்சத்தில் இருந்த தருணம் அது. ஆனால், அப்போதைய தமிழ்நாடான மதராசபட்டினத்திலோ மகளிர் உரிமை, சமூக நீதி, கடவுள் மறுப்பு, அறிவியல் சிந்தனை என ஒருவர் பேசி வந்தார். ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் இருந்த மக்களுக்காக சுதந்திர வீரர்கள் போராட்டங்களை முன்னெடுத்த போது, சாதியத்தால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், ஆண்களால் அடிமைப்படுத்தப்படும் பெண்களுக்கும் ஆதரவாக சிந்தனைகளை வளர்த்து வந்தார் அவர். அவர்தான் ஈரோட்டை சேர்ந்த ராமசாமி.
அந்த வகையில் மகளிர் உரிமைக்காக ஒரு மாநாட்டை நடத்திய போது, உரிமைக்காக போராடிய மகளிர், ராமசாமியை பெரியார் என அழைத்தனர். பின்நாள்களில் அதுவே அவரது பெயராக பட்டிதொட்டியெங்கும் அறியப்பட்டது. அவரது சிந்தனைகளை முன்வைத்துதான் திராவிட கட்சிகள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் இன்றளவும் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றன.
அப்படியான ஒரு தத்துவ ஞானியாக வாழ்ந்து மறைந்த பெரியாரின் சிந்தனைகள் பல இன்றைய வாழ்வியலுக்கும் பொருந்தும் என்றால் யாரும் மறுப்பது அரிது. அதற்கு ஓர் உதாரணம் சொல்வதானால், யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும், உனது புத்திக்கும், பொது அறிவுக்கும் பொருந்தாத ஒன்றை நம்பாதே என்று பெரியாரே கூறி அனைத்தையும் அறிவின் கண்கொண்டு காண்பதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கிறார்.
சிந்திப்பவன் மனிதன், சிந்திக்க மறுப்பவன் மதவாதி, சிந்திக்காதவன் மிருகம், சிந்திக்கப் பயப்படுகிறவன் கோழை என்று கூறி ஒவ்வொரு மனிதனுக்கும் சுயசிந்தனை எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தியுள்ளார். ஒருவன் தன் தேவைக்கு மேலே எடுத்துக் கொள்ளாவிட்டால், எல்லோருக்கு எல்லாம் கிடைத்து விடும் என்றும் ஆயுதமும், காகிதமும் பூஜை செய்ய அல்ல, புரட்சி செய்ய என்று கம்யூனிச சிந்தனையையும் அவர் பேசியுள்ளார்.
வாழ்க்கை ஒழுக்கத்தில் கணவனுக்கு ஒரு சட்டம், மனைவிக்கு வேறு சட்டமா என்றும், மதம் மனிதனை மிருகமாக்கும், சாதி மனிதனை சாக்கடையாக்கும் என்றும் சமூக நீதியை தனது சிந்தனைகள் மூலம் விதைத்துள்ளார்.
பெரியாரை பற்றிய ஆயிரம் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் அவரது சிந்தனைகள் இன்றுவரை தமிழ்நாட்டின் அரசியலில் மட்டுமல்லாது, சாமானிய மனிதனின் வாழ்விலும் ஏதோ ஒருவகையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை மறுக்கமுடியாது...