கலாசாரத்தோடு தமிழ் அடையாளங்கள் எஞ்சியிருக்கும் மதுரையில் தமிழ் வளர்த்த அறிஞர்களின் சிலையும், தமிழன்னை சிலையும் சாலை விரிவாக்கப் பணிகள் காரணமாக அகற்றப்படுவதாக தகவல் வெளியான நிலையில், பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதுகுறித்த செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்.
மதுரையும், தமிழும் எப்போதும் பிரிக்க முடியாதது. இன்றளவும் மதுரையின் தெருக்களில் மண் மணத்தோடு தமிழ் மணம் கமழும் நிலையைப் பெருமையாக குறிப்பிடுவார்கள். அப்படிப்பட்ட மதுரையில் இன்றும் பழமையான இடங்களும், போற்றுதலுக்குரிய வரலாறுகளும் நிரம்பிக்கிடக்கின்றன. இப்படி கலாசாரத்தோடும், தமிழ் அடையாளங்களோடும் இருக்கும் மதுரையில் தமிழ் வளர்த்த அறிஞர்களின் சிலையும், தமிழன்னை சிலையும் சாலை விரிவாக்கப் பணிகளால் பொதுமக்கள் பார்வையைவிட்டு அகலும் நிலை ஏற்பட்டுள்ளது.
மதுரையின் அடையாளங்களாக நகரின் பிரதான பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த தமிழன்னை சிலை, நாடகத்தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் சிலை, கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, பாரதியார், உ.வே.சாமிநாத அய்யர் சிலை, தனிநாயகம் அடிகள் சிலை அகற்றப்பட உள்ளது. குறிப்பாக தமிழகத்திலேயே தமிழன்னைக்கு சிலை உள்ள இடம் மதுரை மட்டுமே. அந்த வகையில் தமுக்கம் மைதானத்தில் உள்ள தமிழன்னை சிலை அகற்றப்படுவது, நாம் தமிழர் கட்சி மற்றும்
தமிழ் அமைப்புகள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பாண்டிய மன்னர்களின் அடையாளமாக இருந்த மீன் சின்னம் ரயில் நிலைய வாயிலில் இருந்து அகற்றப்பட்ட நிலையில், மதுரையை போற்றும் சிலைகளும் அகற்றப்பட்டால் தமிழின் பெருமை மறையும் என வேதனை தெரிவிக்கிறார்கள்.
1965இல் அப்போதைய முதல்வராக இருந்த அண்ணா காலத்தில் டிகேஎஸ் சகோதரர்கள் உதவியால் தமிழ் உலகின் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் சிலை திறக்கப்பட்டது. இதனையடுத்து 5ஆம் உலகத்தமிழ் மாநாடு அன்றைய முதல்வர் எம்ஜிஆரின் ஆட்சியில் நடத்தப்பட்டபோது தமுக்கம் மைதான நுழைவு வாயிலில் தமிழன்னை தேரில் அமர்ந்திருப்பது போன்ற சிலை வடிவமைக்கப்பட்டது. அதனை உலகத் தமிழ் மாநாட்டின் நிறைவு நாளான 10.1.1981-ஆம் தேதி எம்ஜிஆர் முன்னிலையில் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி திறந்து வைத்தார். இந்தச் சிலைகள் மதுரைக்கு புதிய அடையாளத்தை ஏற்படுத்தின. அதுமட்டுமில்லாமல், 1981ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி முதல் 10ஆம் தேதி 5 வது உலகத்தமிழ் மாநாடு மதுரையில் நடைபெற்ற போது தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட பெரும் பங்காற்றிய தொல்காப்பியர், தமிழ்தாத்தா உ.வே.சாமிநாத அய்யர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, தனிநாயகம் அடிகள், வெளிநாட்டில் பிறந்து தமிழ் வளர்ச்சிக்குப் பங்காற்றிய வீரமாமுனிவர், ஜி.யு.போப், சுவாமிநாத அய்யர், நாவலர் சோமசுந்தர பாரதியார் உள்ளிட்டோருக்கும் சிலைகள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில், மதுரையில் அமைந்துள்ள ஆறு சிலைகளை நீக்குவது தொடர்பாக, மதுரை மாநகராட்சி அளித்துள்ள விளக்கத்தில், சாலை விரிவாக்கப் பணியின் காரணமாக உ. வே.சா, கனிமணி தேசிக விநாயகம் பிள்ளை சிலைகள் மாநகராட்சி நீச்சல்குளம் அருகேயுள்ள மாநகராட்சி படிப்பகத்துக்கு மாற்றப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. தமுக்கத்தில் உள்ள தமிழன்னை சிலை, டி.டி.சங்கரதாஸ் சுவாமிகள் சிலை ஆகியவை தமிழ்ச்சங்கத்திற்கும், தமுக்கத்தில் உள்ள தியாகிகள் நினைவுச்சின்ன ஸ்தூபி மாநகராட்சி வளாகத்துக்கும், நேரு சிலை முக்கோண வடிவிலான பூங்காவுக்கும் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மதுரையின் மேம்பாட்டுப் பணிகள் தவிர்க்க முடியாதது என்றாலும் பொதுமக்கள் பார்க்கும் வகையில் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சிலைகள் வேறு இடத்துக்கு மாற்றப்படுவதை தடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.