சென்னைப் பல்கலைக்கழகம் என்பது தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1851-ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இது, 5 செப்டம்பர் 1857-இல் இந்திய சட்டமன்றத்தின் கீழ் இணைக்கப்பட்டது.
இப்படிப்பட்ட பல்கலைக்கழகம் அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்குவது வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில் சென்னை பல்கலைக்கழகத்தின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை சார்பில் வருகிற 14-ஆம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை இந்தியாவில் கிறிஸ்தவத்தை பரப்புவது எப்படி? நமக்கு ஏன் இந்த மார்க்கம் தேவை? என்ற தலைப்புகளில் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதனுடைய அழைப்பிதழ் துறை சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
கல்வி நிலையங்கள் எப்பொழுதும் சாதி மற்றும் மதத்திற்கு அப்பாற்பட்டு இருக்கக்கூடிய நிலையில் ஒரு மதம் சார்ந்த நிகழ்வு எப்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என கேள்வி எழுப்பப்பட இந்த விவகாரம் சர்ச்சையானது. மேலும் இந்த அழைப்புகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்த நிலையில் உடனடியாக இந்த கருத்தரங்கம் ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியானது.
கடும் எதிர்ப்புக்கு பிறகு இது ரத்து செய்யப்பட்ட நிலையில் துறை சம்பந்தப்பட்ட பேராசிரியர் இதனை எப்படி ஏற்பாடு செய்திருந்தார். மாணவர்களிடையே இது மதப் பிரச்சனைக்கு வழி வகுக்காதா என சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். சென்னை பல்கலைக்கழகத்தை பொறுத்த அளவு தற்பொழுது பதிவாளர்தான் பொறுப்பு வகித்து பல்கலைக்கழகத்தை கவனித்து வருகிறார். துணைவேந்தர் இல்லாதது இது போன்ற பிரச்சனைக்கு வலியுறுப்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.