திருப்பரங்குன்றம் தீபம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் pt web
தமிழ்நாடு

"மத விஷயங்களில் யாரும் அரசியல் செய்யக்கூடாது; என்ன மரபோ அதை பின்பற்ற வேண்டும்" - ஜெயக்குமார்

திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்துப் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். மத விஷயங்களில் யாராக இருந்தாலும் அரசியல் செய்யக்கூடாது என்பது தான் அதிமுகவின் நிலைபாடு எனத் தெரிவித்துள்ளார்.

PT WEB

திருப்பரங்குன்றம் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மலையின் மீதுள்ள உச்சிப்பிள்ளையார் கோவிலில் கொப்பரையில் தீபம் ஏற்றுவது வழக்கம். மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாகவே, அந்த தூணில் தீபம் ஏற்றுவது நடைமுறையில் இல்லை.

இந்நிலையில் தான், திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த தனி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதியளித்திருந்தார்.

இதனையடுத்து, நேற்று இந்து முண்ணனி உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகளைச் சார்ந்தவர்கள் தீபம் ஏற்ற திருப்பரங்குன்றத்துக்கு வந்த நிலையில், தமிழக காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், இந்து முண்ணனி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. பின்னர் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அங்கிருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். இதனால் திருப்பரங்குன்றம் பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்

இந்த நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் அதிமுகவைச் சார்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இந்த விவாகாரம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், "மத விஷயங்களில் அரசானாலும், கட்சிகளானாலும் காலங்காலமாக என்ன மரபுகள் பின்பற்றபடுகிறோதோ அதைப் பின்பற்ற வேண்டும். அப்படி இருந்தால் தான் நல்லது. மதவிஷயங்களில் யாராக இருந்தாலும் சரி அரசியல் செய்யக்கூடாது என்பது தான் அதிமுக-வின் நிலைபாடு” எனத் தெரிவித்துள்ளார்.