2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் web
தமிழ்நாடு

வாக்குப்பதிவில் வரலாறு படைத்த தமிழ்நாடு.. மண்டல வாரியாக எவ்வளவு..? முழு விவரம்!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று, மாநிலம் முழுவதும் சராசரியாக 85.15% என்ற வரலாற்றுச் சாதனை பதிவு செய்யப்பட்டுள்ளது.

PT WEB

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று, மாநிலம் முழுவதும் சராசரியாக 85.15% என்ற வரலாற்றுச் சாதனை பதிவு செய்யப்பட்டுள்ளது. 5.73 கோடி வாக்காளர்கள் கொண்ட தமிழ்நாட்டில், இளம் மற்றும் மூத்த வாக்காளர்களும் உற்சாகமாக பங்கேற்றனர். வடக்கு, தெற்கு, கொங்கு, டெல்டா என நான்கு மண்டலங்களிலும் அதிக சதவிகிதம் பதிவாகியுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பொதுமக்கள் காலை முதலே ஆரவாரத்துடன் தங்களின் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்குகளை செலுத்தினர். ஆங்காங்கே சிறு சிறு பிரச்சனைகள், வாக்குப்பதிவு புறக்கணிப்பு காணப்பட்டாலும், சுணக்கம் ஏதும் ஏற்படவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலை விட இம்முறை வாக்குப்பதிவு அதிகரித்தேவுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026

தமிழ்நாட்டில் மொத்தம் 5,73,43,291 வாக்காளர்கள் உள்ளனர். இதில் இளம் வாக்காளர்கள் 1.21 கோடி பேரும் 70 வயதிற்கு மேல் உள்ள மூத்த வாக்காளர்கள் 44.98 லட்சம் பேரும் உள்ளனர். இந்த சூழலில், மாநிலம் முழுவதும் உள்ள 75,064 வாக்குச்சாவடிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

வடக்கு மண்டலம், கொங்கு மண்டலம், டெல்டா மண்டலம், தெற்கு மண்டலம் என தமிழ்நாட்டை நான்கு மண்டலமாக பிரிக்கலாம்.

தெற்கு மண்டலம்

தெற்கு மண்டலத்தை பொருத்தவரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, சிவகங்கை என 9 மாவட்டங்கள் உள்ளன. இந்த 9 மாவட்டங்களில் 51 தொகுதிகள் உள்ளன. 51 தொகுதிகளிலும் பதிவான வாக்குப்பதிவு குறித்த தற்போது காணலாம்.

கன்னியாகுமரி

நள்ளிரவு 1 மணி நிலவரப்படி, கன்னியாகுமரியில் 75.61 சதவிகிதமும், திருநெல்வேலியில் 77.94 சதவிகிதமும், தென்காசியில் 82.41சதவிகிதமும், தூத்துக்குடியில் 80.53 சதவிகிதமும், ராமநாதபுரத்தில் 77.01 சதவிகிதமும், விருதுநகரில் 84.82 சதவிகிதமும், மதுரையில் 80.52 சதவிகிதமும், தேனியில் 81.55 சதவிகிதமும், சிவகங்கையில் 76.66 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

கொங்கு மண்டலம்

கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர், நீலகிரி, திண்டுக்கல் என 10 மாவட்டங்கள் உள்ளன. இந்த 10 மாவட்டங்களில் 68 தொகுதிகள் உள்ளன.

Salem

கோவையில் 84.76 சதவிகிதமும், சேலத்தில் 90.76 சதவிகிதமும், ஈரோட்டில் 90.10 சதவிகிதமும் , திருப்பூரில் 88.59 சதவிகிதமும், நாமக்கலில் 90.21 சதவிகிதமும், கிருஷ்ணகிரியில் 85.48 சதவிகிதமும், தர்மபுரியில் 90.13 சதவிகிதமும், கரூரில் 92.63 சதவிகிதமும், நீலகிரியில் 78.92 சதவிகிதமும், திண்டுக்கலில் 89.25 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

வடக்கு மண்டலம்

அதே போல், வடக்கு மண்டலத்தை பொறுத்தவரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதே வடக்கு மண்டலம் என அழைக்கப்படுகிறது. இந்த 11 மாவட்டங்களில் மொத்தம் 69 தொகுதிகள் உள்ளன.

சென்னை சென்ரல்

சென்னையில் 83.74 சதவிகிதமும் , செங்கல்பட்டில் 85.46 சதவிகிதமும் , காஞ்சிபுரத்தில் 87.39 சதவிகிதமும் , திருவள்ளூரில் 83.76 சதவிகிதமும் , வேலூரில் 88.76 சதவிகிதமும் , ராணிப்பேட்டையில் 89.89 சதவிகிதமும், திருப்பத்தூரில் 88.90 சதவிகிதமும் , திருவண்ணாமலையில் 89.66 சதவிகிதமும் , விழுப்புரத்தில் 88.99 சதவிகிதமும் , கள்ளக்குறிச்சியில் 88.50 சதவிகிதமும், கடலூரில் 85.49 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

டெல்டா மண்டலம்

டெல்டா மண்டலத்தில் மொத்தம் 8 மாவட்டங்கள் உள்ளன. அதில் மொத்தம் 46 தொகுதிகள் உள்ளன. தஞ்சாவூரில் 80.63 சதவிகிதமும் , திருவாரூரில் 83.74 சதவிகிதமும், நாகப்பட்டினத்தில் 83.69 சதவிகிதமும் , மயிலாடுதுறையில் 82.14 சதவிகிதமும், புதுக்கோட்டையில் 83.90 சதவிகிதமும் , திருச்சிராப்பள்ளியில் 85.44 சதவிகிதமும் ,பெரம்பலூரில் 85.50 சதவிகிதமும், அரியலூரில் 87.41 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.