தேநீர் இன்றி நம்மில் பலருக்கு விடியலே இல்லை... அப்படி நாம் சுவைத்து ரசித்து பருகும் ஒவ்வொரு கோப்பைத் தேநீரின் வாசனைக்கு பின்னாலும், ஒரு தலைமுறையின் கண்ணீரும், உழைப்பும் கலந்திருக்கிறது. பசுமை போர்த்திய தேயிலைத் தோட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மக்களின் செங்குருதி உறைந்து கிடக்கிறது என்கிறது பி.எச்.டேனியலின் RED TEA. 1900-களில், வறுமையின் பிடியில் இருந்த எளிய மக்களை, பொய் வாக்குறுதிகள் கொடுத்து வால்பாறைத் தோட்டங்களுக்கு அழைத்துச் சென்று அடிமைகளாக அடைத்தது பிரிட்டிஷ் அரசு.
அப்படி அடைக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோரில் கருப்பன் - வள்ளி தம்பதியை சுற்றி பின்னப்பட்டது இந்த நாவல். கங்காணியின் பொய்க் கணக்குக்கும் - காலரா , மலேரியா போன்ற கொள்ளை நோய்களுக்கும் இடையே சிக்கி சிதைந்து போன குடும்பங்களையும், அதில் எஞ்சியவர்களின் வடுக்களையும் அணுவணுவாகப் பதிவு செய்த வரலாற்றுச் சாட்சியம்தான் ‘ரெட் டீ' நாவல். இதன் ஆசிரியர் டாக்டர் பி. எச். டேனியல்... வெறுமனே கதை எழுதியவர் அல்ல. 1941 முதல் 1965 வரை 25 ஆண்டுகள் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு மருத்துவராகப் பணியாற்றி, அவர்களின் கதறலையும், கவலையையும் நேரில் பார்த்தவர். அந்த மனிதர்களின் துயரங்களுக்குத் தன் பேனாவால் உயிர் கொடுத்தவர்.
இலக்கியரீதியாக விருதுகள், அங்கீகாரங்கள் என பெரிதும் கொண்டாடப்படவில்லை என்றாலும், உலகளவில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் தொழிலாளர் சுரண்டலை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்திய ஆவணங்களில் ஒன்றாக ’ரெட் டீ’ உள்ளது. தோட்டத் தொழிலாளர் சட்டத்தில் தொழிலாளர் நலனுக்கு முன்னுரிமை கொடுக்க தூண்டுகோலாக இருந்தது 1969இல் வெளியிடப்பட்ட ‘red tea’ புத்தகம். இந்த நூலை ‘எரியும் பனிக்காடு’ என்ற தலைப்பில் இரா.முருகவேள் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்..இயக்குநர் பாலாவின் 'பரதேசி' திரைப்படத்திற்கு மூல வித்தாக அமைந்தது இந்த நாவல். தேயிலையின் சிகப்பு நிறத்துக்குப் பின்னால் மறைந்திருக்கும் எளிய மக்களின் வலியையும், போராட்டத்தையும் என்றும் நினைவூட்டும் ஒரு காலப்பெட்டகம் red tea.