rain ANI
தமிழ்நாடு

சென்னைக்கு நல்ல செய்தி.. கருணை காட்டிய இயற்கை.. கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்!

சென்னை, புறநகர் பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.. 20 சென்டி மீட்டருக்கு மழை பதிவாகும் என்று மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்த வானிலை ஆய்வு மையம், தற்போது ஒரு நல்ல செய்தியை வழங்கியுள்ளது.

PT WEB

செய்தியாளர் - கார்த்திகேயன்

இந்தியாவில் தென்மேற்கு, வடகிழக்கு ஆகிய இரு பருவமழை காலங்கள் உள்ளன. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வடகிழக்கு பருவமழையும் பொழிவது வழக்கம். பொதுவாக, இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில், தென்மேற்கு பருவமழை தான் அதிக மழை கொடுக்கும் . ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை, வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் அதிக மழை பெய்யும். இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி அன்று தொடங்கிய நிலையில், பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

Rain

குறிப்பாக, சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது. இப்படியான சூழ்நிலையில், சென்னையில் மிக கனமழைக்கான எச்சரிக்கையை தொடர்ந்து, ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், திடீரென அந்த அறிவிப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. அதாவது, சென்னை வானிலை ஆய்வு மையம் முன்பு தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, சென்னையில் 200 மில்லி மீட்டருக்கும் அதிகமாக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, நேற்று கனமழை பெய்தபோது பாதிக்கப்பட்ட 6 இடங்களில், இன்றும் பாதிப்பு இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டது.

இதன்காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்க வாய்ப்பு இருப்பதால், சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாக ஊழியர்கள், தயாராக இருந்தனர். மேலும் பேரிடர் காலங்களில் பொதுமக்களை உடனடியாக உஷார்படுத்தும் நவீன தொழில்நுட்ப முறைப்படி, சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள அனைத்து செல்போன் எண்களுக்கும் எச்சரிக்கை ஒலியுடன் கூடிய அவசரகாலக் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது.

தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் தான், இந்த குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருந்தது. அந்த குறுஞ்செய்தியில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கும், வானிலை அறிவிப்புகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் அந்த அறிவிப்பை வானிலை மையம் திரும்ப பெற்றுள்ளது. சென்னை உள்ளிட்ட வடதமிழக கடலோரத்தில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி கிழக்கு திசையில் நகர்ந்ததால் ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.