கனமழை எச்சரிக்கை pt web
தமிழ்நாடு

Red Alert |இந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை... பள்ளிகளுக்கு விடுமுறை..!

Weather Update |நீலகிரி மாவட்டத்துக்கு இன்று அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Vaijayanthi S

Weather Update |தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி,சென்னையிலும் அதன் புறநகரங்களிலும் நேற்று இரவு மிதமான முதல் கனமழை வரை பெய்தது. பூந்தமல்லி, திருவேற்காடு, காட்டுப்பாக்கம், செம்பரம்பாக்கம், பாரிவாக்கம், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. முக்கிய சாலைகளும் தாழ்வான பகுதிகளும் நீரில் மூழ்க, வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.

திருவண்ணாமலையின் செங்கம், ஜவ்வாது மலை, புதுப்பாளையம், தண்டராம்பட்டு போன்ற இடங்களில் மூன்றாவது நாளாக தொடர்ந்து இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்தது. சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. திருச்சி மாவட்டம் முசிறி மற்றும் சுற்று வட்டாரங்களில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது.

மழை

வாகன ஓட்டிகள், பாதசாரிகள், தரைக்கடை வியாபாரிகள் ஆகியோர் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திடீரென வானம் கருமையாகி, தியாக துருகம், சின்னசேலம், சங்கராபுரம், ஆலத்தூர்,வடக்கனந்தல் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்தது. சங்கராபுரம் அருகே பிரம்ம குண்டம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் வளாகத்தில் அமைந்த மூங்கில் மரத்தில் திடீரென இடி விழுந்து தீப்பற்றியது.

நீலகிரி மாவட்டத்துக்கு இன்று அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தின் ஒருசில இடங்களில் அதிகளவு மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மண்சரிவு , மரக்கிளைகள் சாலைகளில் விழுந்து பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ஒருநாள் மட்டும் அனைத்து சுற்றுலாத்தலங்களும் மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும் போது தகவல் தெரிவிக்க மாவட்ட அவசர காலகட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.