எதிரிகளால் ஆற்று வெள்ளத்தில் குதித்த ஷிபு சோரன்.. ஜார்க்கண்ட் மக்களுக்கு ‘டிஷோம் குரு’வானது எப்படி?
சிறுவயதிலேயே படிப்பை நிறுத்திய ஷிபுசோரன்
சிறுநீரகக் கோளாறு காரணமாக டெல்லி தனியார் மருத்துவமனையில் ஒன்றரை மாதங்களாகச் சிகிச்சை பெற்றுவந்த ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் காலமானார். அவருடைய மறைவு, ஜார்க்கண்ட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான இவர், பழங்குடியினரின் உரிமைகளுக்கான போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியதுடன், தனி ஜார்க்கண்ட் மாநிலத்திற்கான இயக்கத்தையும் அவர் வழிநடத்தினார். மேலும், அவர் 'குருஜி' என அழைக்கப்பட்டார். மறைந்த இந்தத் தருணத்தில் அவருடைய சேவைகளையும், நினைவுகளையும் பலரும் நினைவுகூர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், ஷிபு சோரன் ‘டிஷோம் குரு’ (dishom guru) ஆனது எப்படி என்பது பற்றிய செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஷிபு சோரன் தற்போதைய ராம்கர் மாவட்டத்தின் கோலா தொகுதியில் உள்ள நெம்ராவில் ஜனவரி 11, 1944ஆம் ஆண்டு பிறந்தார். 13 வயதில் கிராமப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியை அவர் படித்துக் கொண்டிருந்தபோது, அவரது தந்தை வட்டிக்குப் பணம் கொடுத்தவர்களால் கொல்லப்பட்டார். இந்த துயரம் அவரது மனதை உலுக்கியது. இதனால், அவர் தனது பள்ளிப் படிப்பையும் விட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார். தவிர, வட்டிக்கு பணம் கொடுப்பவர்களுக்கு எதிராகவும் போராட முடிவு செய்தார்.
ஷிபு சோரன் ‘டிஷோம் குரு’ (dishom guru) ஆனது எப்படி?
இதற்காக, பழங்குடி சமூகத்தை ஒன்றிணைப்பது என உணர்ந்த அவர், 1970 முதல் நெல் அறுவடை இயக்கத்தைத் தொடங்கினார். இதன்மூலம் அவர் வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்தார். இதனால், பழங்குடி மக்களுக்கு கடன் கொடுத்து வந்த நபர்கள் எல்லாம் ஷிபு சோரனுக்கு எதிரிகளாகினர். ஆனால் அவர் கொஞ்சமும் துவண்டுபோகாமல் ஒவ்வொரு கிராமத்திற்கும் தன்னுடைய மிதிவண்டியில் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த விஷயமறிந்த வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் ஷிபு சோரனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர்.
அதன்படி, மழைக்காலத்தின் ஒருநாளில் அவர் எதிரிகளால் சூழப்பட்டார். அப்போது அவர் பராகர் நதி அருகே சென்றுகொண்டிருந்தார். அந்த நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அந்தக் கணநேரத்தில் இனியும் எதிரிகளிடமிருந்து தப்பிக்க முடியாது என நினைத்த அவர், வெள்ளம் பாயும் அந்த ஆற்றில் குதித்தார். அவரைப் பின்தொடர்ந்த எதிரிகளோ, ’இனிமேல் அவர் உயிர் பிழைப்பது கஷ்டம்’ என அங்கிருந்து வெளியேறினர். ஆனால், சிறிது நேரத்திற்குப் பிறகு வெள்ளத்தில் நீந்தியபடியே மறுகரையை அடைந்தார். இந்த நிகழ்வை மக்கள் ஓர் அதிசயமாகக் கருதினர். இதையடுத்தே பழங்குடியின மக்கள் ஷிபுவை, ‘டிஷோம் குரு’ என அழைக்கத் தொடங்கினர் எனவும், சந்தாலியில் ’டிஷோம் குரு’ என்றால், நாட்டின் குரு என்று பொருள் ஆகும் எனவும் ஹிந்துஸ்தான் ஊடகம் வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.