விஜய்க்கு ஆதரவு வழங்கி முதல்வராகப் பதவியேற்க வேண்டிய விஷயம் ஒருநாளில் முடிந்திருக்க வேண்டிய நிலையில், ஆளுநரின் தாமதங்களாலும், சில கட்சிகள் எடுக்க வேண்டிய முடிவுகளாலும் 3 நாட்கள் தள்ளிப் போயிருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் தவெக 108 இடங்களைப் பெற்றபோதும் அக்கட்சியால் ஆட்சியமைக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது. ஒருகட்டத்தில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், அவசர அவசரமாக அதிலிருந்து வெளியேறி தவெகவுக்கு ஆதரவு அளித்தது. இதையடுத்து, தவெக ஆட்சியமைப்பதற்கான எண்ணிக்கை 112 (விஜயின் இரண்டு தொகுதிகளில் ஒன்று நீக்கப்படும்) ஆக மாறியது. இதையடுத்து, காங்கிரஸ் வந்த சந்தோஷத்தில் தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை முதன்முறையாகச் சந்தித்து (மே 6), ஆட்சியமைக்க உரிமை கோரினார் தவெக தலைவர் விஜய். ஆனால், அதை ஏற்காத ஆளுநர் மாளிகை, உறுதியான பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது. இது தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளானது.
இதையடுத்து, மக்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட விஜய்க்கு ஆதரவாக மக்களும், பிற கட்சிகளின் தலைவர்களும் குரல் கொடுத்தனர். ஆளுநர்களின் செயல்பாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், தவெகவை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதற்கிடையில் விஜய்க்கு எதிராக அதிமுக - திமுக கூட்டணி வைக்கப்போவதாக திடீர் தகவல் வெளியாகி புயலைக் கிளப்பியது. மேலும், அதிமுக - திமுக இணைந்து பெரும்பான்மையை நிரூபித்தாலும் அதற்கும் அழைப்பு விடுக்கப்படும் என ஆளுநர் தெரிவித்திருந்தார். ஆனால், அந்த தகவலை இருகட்சிகளும் உறுதி செய்யவில்லை. இதைத் தொடர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் 2ஆவது முறையாக, தவெக தலைவர் விஜய், ஆளுநரை நேரில் சந்தித்து உரிமை கோரினார். அதேநேரத்தில், மே 10ஆம் தேதிக்குள் இந்த விஷயத்தில் முடிவு எட்டப்படாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பேன் எனவும் ஆளுநர் தெரிவித்திருந்தார். இதற்கிடையே, தவெக தரப்பில் விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கோரப்பட்டது. ’அவர்கள் அனைவரும் தங்களது கட்சியினரிடம் ஆலோசனை நடத்தி இறுதி முடிவெடுக்கப்படும்’ எனத் தெரிவித்தனர்.
இந்த நிலையில்தான் இடதுசாரிகள் இரண்டும் நேற்றும் (மே 8) நிபந்தனையற்ற ஆதரவை தவெகவிற்கு வழங்கின. ஆனால், விசிக மட்டும் இந்த விஷயத்தில் இழுத்தடித்ததுடன், இதுகுறித்த முடிவு இன்று (மே 9) அறிவிக்கப்படும் எனக் கூறியது. எனினும், இடதுசாரிகள் ஆதரவுக் கடிதத்துடன் தவெக தலைவர் விஜய், ஆளுநர் ஆர்லேகரை மூன்றாவது முறையாகச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால், மீண்டும் அறுதிப் பெரும்பான்மை இல்லாததால், விஜயை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்கவில்லை என தகவல் வெளியானது. இதனால், தவெகவிற்கு மேலும் சிக்கல் உருவாகியது.
இந்த நிலையில்தான், விசிக தலைவர் திருமாவளவன், தவெகவிற்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து, விசிகவின் 2 உறுப்பினர்களின் ஆதரவால் தவெகவிற்கு 118 பெரும்பான்மை கிடைத்தது. மேலும், விசிகவின் ஆதரவுக் கடிதத்துடன், இன்று விஜய், 4ஆவது முறையாக ஆளுநரைச் சந்தித்தார். கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சந்திப்புக்குப் பிறகு நாளை முதல்வராகப் பதவியேற்க இருக்கிறார், விஜய். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்க இருக்கின்றனர். இதற்கிடையே ஐயூஎம்எல்லும் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. விஜய்க்கு ஆதரவு வழங்கி முதல்வராகப் பதவியேற்க வேண்டிய விஷயம் ஒருநாளில் முடிந்திருக்க வேண்டிய நிலையில், ஆளுநரின் தாமதங்களாலும், சில கட்சிகள் எடுக்க வேண்டிய முடிவுகளாலும் 3 நாட்கள் தள்ளிப் போயிருப்பது அரசியல் ஆரவலர்கள் தெரிவிக்கின்றனர்.