thirumavalavan - stalin - selvaperundhagai
thirumavalavan - stalin - selvaperundhagai pt web
தமிழ்நாடு

மக்களவைத் தேர்தல்: திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டில் இழுபறி - காரணம் என்ன?

webteam

செய்தியாளர்: ராஜ்குமார்

மக்களவைத் தேர்தல் நெருக்கத்தில் உள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் பணிகளை அக்கட்சி தீவிரப்படுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளை ஒதுக்கிய திமுக, இந்திய முஸ்லீம் லீக், கொ.ம.தே.க ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியை ஒதுக்கியுள்ளது.

election

ஆனால், திமுக கூட்டணியில் உள்ள முக்கிய தேசிய கட்சியான காங்கிரஸ் உடனான முதற்கட்ட பேச்சுவார்த்தையில் கூடுதல் தொகுதிகளை காங்கிரஸ் கேட்டுள்ளது. புதுச்சேரியுடன் சேர்த்து 8 தொகுதிகளை மட்டுமே கொடுக்க திமுக முன்வந்திருப்பதால் காங்கிரஸ் கட்சி அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிகிறது. மக்கள் நீதி மய்யமும் கூட்டணியில் இணைய இருப்பதால் அக்கட்சிக்கும் சேர்த்து 11 தொகுதிகள் வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருவதாகத் தெரிகிறது. இதனால், திமுக - காங்கிரஸ் இடையே 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை இன்னும் நடைபெறவில்லை.

அதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சியுடனான பேச்சு வார்த்தையும் முதற்கட்டத்துடன் நிற்கிறது. ஒரு பொது தொகுதி உட்பட 4 தொகுதிகளை விடுதலை சிறுத்தைகள் கேட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த திமுக தொகுதி பங்கீட்டு குழு 2 தொகுதிகள் மட்டுமே வழங்கப்படும் என கூறியதாக தெரிகிறது. ஒரு பொது தொகுதியுடன் 3 தொகுதிகள் ஒதுக்க மீண்டும் விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்தி வருவதால் இழுபறி நீடிக்கிறது. 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு திமுக அழைத்த போதும் கட்சியின் உயர்நிலைக்குழுக் கூட்டத்தை காரணம் காட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கவில்லை.

Thirumavalavan

மேலும், மதிமுகவுடனான பேச்சுவார்த்தையும் இதுவரை முடிவாகவில்லை. இதனிடையே, விரைவிலேயே தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய நினைக்கும் திமுக தலைமை, கூட்டணி கட்சிகளின் எதிர்பார்ப்பை சமாளிக்குமா என்பது நடப்பு வாரத்தில் நடைபெறும் அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தைகளில் தெரியவரும்.