தமிழ்நாடு

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு விவகாரம்: தமிழக அரசிடம் வருத்தம் தெரிவித்தது ரிசர்வ் வங்கி

நிவேதா ஜெகராஜா

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு குறித்த சர்ச்சையில், ரிசர்வ் வங்கி தரப்பிலிருந்து தமிழக அரசிடம் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

73-வது குடியரசுதினவிழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், அரசுத்துறை அலுவலகங்களிலும் தேசிய கொடி ஏற்றி குடியரசு தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதனொரு பகுதியாக சென்னை பாரிமுனையில் அமைந்துள்ள இந்திய ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. அப்போது தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்த நேரத்தில் அங்குள்ள சில அதிகாரிகள் எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அங்கிருந்த செய்தியாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் அந்த ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, `தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கும் போது எழுந்து நிற்க வேண்டிய தேவையில்லை என்ற உயர்நீதிமன்ற உத்தரவு அமலில் இருக்கின்றது. அதனால் நாங்கள் எழுந்திருக்க வேண்டிய அவசியமில்லை. எங்கள் செயலுக்காக வருத்தம் தெரிவிக்கவும் முடியாது’ என அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருள் ஆனது.

இதைத்தொடர்ந்து தமிழக அரசு பிறப்பித்த ‘தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டும்’ என்ற அரசாணை மத்திய அரசு அலுவலகங்களுக்கும் பொருந்துமா என கேள்வி எழுந்துள்ளது. இப்படியான சூழலில், ரிசர்வ் வங்கி சார்பில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அதிகாரிகள் எழுந்து நிற்காதது தொடர்பாக தமிழக அரசிடம் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனிடம், ஆர்.பி.ஐ. மண்டல இயக்குநர் எஸ்.எம்.என்.சாமி இதுகுறித்து நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்திருக்கிறார்.