ஆர்.பி. உதயகுமார் pt web
தமிழ்நாடு

”திமுக உறுப்பினராக இறந்தவர்களையும் சேர்த்துள்ளது; வெளிச்சத்துக்கு வந்துள்ளது” - ஆர்.பி உதயகுமார்.!

இறந்த வாக்காளர்களையும், திமுக உறுப்பினராக சேர்த்துள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது என தெரிவித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

PT WEB

முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசுகையில், ”திமுக மீது இருக்கும் மக்களின் கோபத்தை மடைமாற்றம் செய்ய இளைஞரணி, மகளிரணி மாநாட்டை நடத்துகிறார்கள். இதை மக்கள் நம்பத் தயாராக இல்லை. வானத்தைப் ஜமுக்காளத்தால் மூடி மறைக்க முடியாது என்பது போல, திமுகவின் மீது மக்களின் கோபஅலையை மூடி மறைக்க முடியாது. ஸ்டாலின் திமுக அரசு தமிழ்நாட்டிற்கு எதை செய்தது? எதை செய்ய தவறிவிட்டது? என்று தமிழ்நாடு மக்கள் எடை போட்டு பார்த்து தீர்ப்பு வழங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. 525 தேர்தல் வாக்குறுதியை கொடுத்துவிட்டு எத்தனை சதவீதம் நிறைவேற்றி உள்ளார்கள். திமுக செய்தது என்ன? சொன்னது என்ன? இப்போது சொல்வது என்ன? என்ற நிலைமையை மக்கள் அலசி ஆராய வேண்டும்.

முதல்வர் மு.க ஸ்டாலின்

கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை அடித்தளமாகக் கொண்ட 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை, 150 நாட்களாக உயர்த்துவோம், ஊதியத்தை உயர்த்துவோம் என்று கூறினார்கள். அதை செய்ய தவறி விட்டார்கள். இது போன்ற பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக தவறிவிட்டது. இதில், திமுக அரசுக்கு நஷ்டம் கிடையாது. மக்களுக்கு தான் கஷ்டமாக உள்ளது. அதேபோலத் தான் கல்வி கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து போன்ற வாக்குறுதிகளை கொடுத்தும் எதையும் செய்யவில்லை. இதனால், மக்களுக்குத்தான் கஷ்டம். இது எல்லாம் ஸ்டாலின் திமுக அரசு புரியாத காரணத்தால் இன்றைக்கு செல்வாக்கை இழந்து உள்ளது. இதுதான் உண்மையான களநிலவரம்.

ஆனால், திமுகவிற்கு செல்வாக்கு இருப்பது போல மிகைப்படுத்தி காட்ட, விளம்பர யுக்தியை செய்து வருவது திமுகவிற்கு கைவந்த கலையாகும். திமுகவில் கருணாநிதி பிள்ளையாக, அரசியல் பின்புலத்துடன்தான் ஸ்டாலின் வந்தார். இன்றைக்கு இழந்த செல்வாக்கை இருப்பதுபோல மிகைப்படுத்தி காட்ட விளம்பர யுக்தியை, தேர்தல் யுத்தியாக மாற்றி வருகிறது.. இதை மக்கள் நம்ப தயாராக இல்லை.

முதல்வர் ஸ்டாலின், ஆர்.பி உதயகுமார்

இன்னும் மூன்று மாதம் தான் இந்த ஆட்சியின் ஆயுள் உள்ளது. அதிகார பலம், பண பலம், சர்வதிகார பலம், பொய் பிரச்சாரம் ஆகியவற்றை வைத்து ஆட்சியின் ஆயுளை நீடிக்க முயற்சிக்கிறார்கள். இழந்த செல்வாக்கை மீட்க மாவட்ட செயலாளர்கள் ,நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தமிழக வாக்காளர்களில் 30 சதவீதம் திமுகவின் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். அதனால், இறந்து போன வாக்காளர்களும் திமுக உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விவரம் எல்லாம் எஸ்.ஐ.ஆர் பணிமூலம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. கதவைத் தட்டி உறுப்பினராக சேர்க்கிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால், கதவைத் தட்டி திட்டங்களைத் தருவோம் என்று கூறவில்லை.

வானத்தை ஜமுக்காளத்தால் மூடி மறைக்க முடியாது. அதுபோல, திமுகவின் எதிர்ப்பு அலைகளை எத்தனை மாநாடு நடத்தினாலும் அதை மறைக்க முடியாது.

தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்து விட்டது. கடந்த, நான்கரை ஆண்டுகளில் 5 லட்சம் கோடி கடன் உள்ளது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மின்கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு இது போன்ற பிரச்னைகளால் திமுக மீது மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர். இதையெல்லாம் மடை மாற்றம் செய்ய இளைஞரணி மாநாடு, மகளிரணி மாநாடு என்ற பல்வேறு மாநாடுகளை நடத்துகிறார்கள். வானத்தை ஜமுக்காளத்தால் மூடி மறைக்க முடியாது. அதுபோல, திமுகவின் எதிர்ப்பு அலைகளை எத்தனை மாநாடு நடத்தினாலும் அதை மறைக்க முடியாது.

முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் கே. பழனிசாமி

தற்போது தேர்தல் வருகிறது. அதனால், ஸ்டாலினுக்கு பொங்கல் பரிசு, மகளிர் உரிமை பயனாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு இது போன்ற திட்டங்கள் ஞாபகத்தில் வரும். அதே போல, தமிழகத்தில் நடைபெறும் சட்டஒழுங்கு சீர்கேடை கட்டுப்படுத்த, போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தேர்தல் நேரத்தில் ஸ்டாலின் அக்கறை செலுத்துவாரா? என மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், 175 தொகுதிகளில் அதிமுக பொதுச்செயலாளர் கே. பழனிசாமி எழுச்சி பயணத்தை மேற்கொண்டு வருவதாகவும், 2026 ஆண்டில் பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைய, மக்கள் மகுடம் சூட்டுவார்கள் என்றும் கூறியுள்ளார்.