”திமுக ஒரு தீயசக்தி; அதை அகற்றவே அதிமுக தொடங்கப்பட்டது” - எதிர்க்கட்சித் தலைவர் கே. பழனிசாமி.!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்னும் பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், இன்று செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே தையூர் பகுதியில் சட்டப்பேரவை எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பரப்புரைப் பயணம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பேசிய எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “ திமுக ஒரு "தீய சக்தி" என்றும், அந்தத் தீய சக்தியை வேரோடு அகற்றுவதற்காகவே அதிமுக தோற்றுவிக்கப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி முடிவுக்கு வர இன்னும் மூன்றே அமாவாசைகள்தான் பாக்கி உள்ளது. செங்கல்பட்டு மக்களின் நீண்ட காலக் கோரிக்கையை ஏற்று, நிர்வாக வசதிக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து புதிய மாவட்டமாக உருவாக்கியது அதிமுக அரசுதான்.
திமுக அரசு 5 சதவீத வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 98 விழுக்காடு நிறைவேற்றப்பட்டன. ஆனால், தற்போதைய திமுக அரசு 5 விழுக்காடு வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது. குறிப்பாக, 100 நாள் வேலைத் திட்டத்தை திமுகவினர் 150 நாட்களாக உயர்த்துவோம் எனப் பொய் வாக்குறுதி அளித்தனர். ஆனால், அதிமுகவின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசுதான் அதனை 125 நாட்களாக உயர்த்தியது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், வேலை நாட்கள் 150-ஆக உயர்த்தப்படுவதோடு, தொழிலாளர்களுக்குச் சம்பள உயர்வும் நிச்சயம் வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ”கொரோனா பேரிடர் காலத்தில் வருமானம் இல்லாத சூழலிலும், 8 கோடி மக்களின் உயிரைப் பாதுகாக்கத் திறம்படச் செயல்பட்டது அதிமுக அரசு. ஆனால், தற்போது திமுக ஆட்சியில் கடன் சுமை அதிகரித்துள்ளது. இந்தியா முழுவதிலும் கடன் வாங்குவதில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. சுமார், 5.5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி மக்களைக் கடனாளிகளாக ஆக்கியதே திமுகவின் சாதனை” என்று கூறினார்.
மேலும், மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி, சீருடை, மிதிவண்டி போன்ற திட்டங்களை திமுக அரசு முடக்கிவிட்டதாகக் கூறிய அவர், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் ‘தாலிக்குத் தங்கம்’ திட்டத்துடன் மணமக்களுக்குப் பட்டு வேட்டி, பட்டுப்புடவை வழங்கப்படும் என்றார். மீனவர்களுக்கான தடைக்கால நிவாரணம் உயர்த்தப்படும் என்றும் உறுதியளித்தார். மாமல்லபுரத்தில் மோடி - ஜின்பிங் சந்திப்பு நடைபெற்றதைச் சுட்டிக்காட்டி, அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்ததாலேயே உலகத் தலைவர்கள் இங்கு வந்தனர் என்றும் செங்கல்பட்டில் நடந்த தெரிவித்துள்ளார்.

