சாட்டையடி வாங்கிய பக்தர் pt desk
தமிழ்நாடு

ராசிபுரம் | கோயில் திருவிழாவில் வினோதம் - பூசாரியிடம் சாட்டையடி வாங்கிய பக்தர்கள்!

ராசிபுரம் அருகே கோயில் திருவிழாவில் சாட்டையடி வாங்கி பக்தர்கள் விநோத நேர்த்திக்கடன் செலுத்தினர்.

PT WEB

செய்தியாளர்: எம்.துரைசாமி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சீராப்பள்ளி மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவில் இன்று அதிகாலை பூச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து பக்தர்கள் ஊர்வலமாக கோயிலை வலம் வந்து, பூச்சட்டியில் இருந்த நெருப்பை கோயில் முன்பு கொட்டியவுடன், பக்தர்கள் அதை திருநீராக எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து சாட்டையடி நிகழ்ச்சி நடந்தது. இதில், கோயில் பூசாரி பக்தர்களை சாட்டையால் அடித்து ஆசி வழங்கினார். பக்தர்கள் தங்களது பிரார்த்தனை நிறைவேறினாலும் அல்லது ஏதாவது ஒரு வேண்டுதலை மனதில் நினைத்துக் கொண்டும் பூசாரி முன்பு வரிசையாக நிற்கின்றனர். இதையடுத்து சாட்டையுடன் நிற்கும் பூசாரி அருள் வந்து பக்தர்களை 3 முறை அடிக்கிறார். பக்தர்கள் கையை உயர்த்தியபடி சாட்டையடி வாங்கிச் சென்றனர்.

இந்த வினோத பழக்கம் பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்படுகிறது. இது குறித்து சீராப்பள்ளியை சேர்ந்த பக்தர்கள் கூறியதாவது: தங்களது பிரார்த்தனை நிறைவேறினால் சாட்டையடி நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர். மேலும், சட்டையடி வாங்கினால் தீமை விலகி, நன்மை நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளதால் குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் என அனைவரும் பூசாரியிடம் சாட்டையடி வாங்கிக் கொள்வதாக தெரிவித்தனர்.