த.வெ.க தலைவர் விஜய் தனது குடும்பப் பிரச்னை குறித்து பேசிய கருத்தை விமர்சித்து அக்கட்சியின் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் கேள்வி எழுப்பியுள்ளார். இதனை விமர்சித்த ரஞ்சனா நாச்சியார், “எது ‘வொர்த் இல்லை’ தலைவா? உங்கள் மனைவியா அல்லது திருமண வாழ்க்கையா” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேடையில் பெண்ணியம் குறித்து பேசுவதற்கு முன் வாழ்க்கையில் ஒழுக்கத்தைப் பேண வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து, வரயிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிட உள்ளார். இதற்காக, அவர் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். இந்த நிலையில், விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு, ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது, தவெக தலைவர் விஜய் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே திருமண நிகழ்வு ஒன்றில், நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் ஒன்றாக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். அவர்கள் இருவரும் ஒரே நிறத்தில் ஆடைகள் அணிந்து வந்ததும் கவனம் ஈர்த்தது. இருவரும் ஒன்றாக விழாவில் பங்கேற்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி விமர்சனங்களை ஏற்படுத்தின.
இதைத் தொடர்ந்து, மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெக மகளிர் தினவிழாவில் பேசிய விஜய், ”தனது தனிப்பட்ட விஷயங்கள் குறித்து பேசப்படுவது கவலைப்படும் அளவுக்கு வொர்த் இல்லை” என்று கூறியிருந்தார். த.வெ.க தலைவர் விஜய் தனது குடும்பப் பிரச்னை குறித்து பேசிய கருத்தை விமர்சித்து அக்கட்சியின் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனை விமர்சித்த ரஞ்சனா நாச்சியார், “எது ‘வொர்த் இல்லை’ தலைவா? உங்கள் மனைவியா அல்லது திருமண வாழ்க்கையா” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேடையில் பெண்ணியம் குறித்து பேசுவதற்கு முன் வாழ்க்கையில் ஒழுக்கத்தைப் பேண வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ‘அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக்கொள்கிறேன். அது worth இல்லை’ என்று கூறினீர்கள். அந்த ஒரு வாக்கியம்தான் இன்று பல கேள்விகளை எழுப்புகிறது. எது worth இல்லை தலைவா? உங்கள் மனைவியா? அல்லது உங்கள் திருமண வாழ்க்கையா? ஒரு அரசியல் தலைவர் பேசும் ஒவ்வொரு சொல்லும், ஒரு குடும்பத்தில் மட்டும் ஒலிக்காது. அது ஒரு சமூகத்தின் மனதிலும் ஒலிக்கும். உங்கள் மனைவி அவர்கள் உங்கள் வீட்டுக்குள் அவர்களை அனுமதிக்கப்பட வேண்டுமென்று நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் என்று செய்திகள் வெளிவருகின்றன. உங்கள் மனைவியை உங்கள் வீட்டினுள் அனுமதிக்காமல் இருக்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டுகள் பேசப்படும் நேரத்தில், ’வீட்டிற்கு ஆறு சிலிண்டர் இலவசமாக தருகிறேன்’ என்று மேடையில் பேசுவது ஒரு கடுமையான முரண்பாடாக தெரியவில்லையா?
ஒரு பக்கம் பெண்கள் உயர்வு பற்றி பேசுகிறீர்கள். மற்றொரு பக்கம் பெண்களின் மரியாதையை காக்கும் மொழிகூட உங்கள் வார்த்தைகளில் காணப்படவில்லை என்றால், அந்த அரசியல் எதற்காக? உங்கள் உண்மை முகம்தான் என்ன ? உங்களை தெய்வமாகக் கருதி வாழும் உங்கள் ரசிகர்கள், குறிப்பாக இன்றைய Gen-Z தலைமுறையினர், சமூக ஊடகங்களில் என்ன பேசுகின்றனர் தெரியுமா? ‘எங்கள் தலைவன் ஏழு பொண்டாட்டி கட்டுவான், அதில் தவறு இல்லை’ என்று எழுதுபவர்கள் இருக்கின்றனர். ‘நான் உனக்கு பொண்டாட்டியாக வருகிறேன்; உன் மனைவியை விட்டு விலகிவிடு’ என்று எழுதும் பதிவுகளும் இருக்கின்றன, இந்த மொழி யாரால் உருவாக்கப்பட்டது? இந்த மனநிலை எங்கே இருந்து வந்தது? ஒரு தலைவரின் சொல் ஒரு ரசிகனின் முழக்கமாக மாறும். ஒரு தலைவரின் செயல் ஒரு இளைஞனின் நடத்தை ஆகிவிடும். ’தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே’ என்ற பழமொழி உங்களுக்கு தெரியாதா?
ஒரு நடிகையை கூட்டிக்கொண்டு பொதுவெளியில் வரும்போது, அதை பார்த்து இன்றைய இளைஞர்கள் என்ன கற்றுக்கொள்வார்கள்? ’திருமணத்திற்கு பின்பு நாமும் இப்படியே வாழலாம்’ என்ற எண்ணம் அவர்களிடம் விதைக்கப்படாதா? இது தான் நம் தமிழ் கலாச்சாரமா? தமிழ் பண்பாடு பெண்களை பொருளாக பார்க்கவில்லை. மரியாதையாக பார்த்தது. தமிழ் மரபு பெண்களை இழிவுபடுத்தவில்லை. அவர்களை உயர்த்தியது.
எனது மூதாதையரான வேலுநாச்சியாரை கொள்கைத் தலைவராக கூறிக்கொண்டு, பெண்ணியம் பேசும் நீங்கள், உங்கள் சொந்த வாழ்க்கையிலும் அந்த கண்ணியத்தை காக்க வேண்டாமா? பெண்ணியம் என்பது மேடையில் முழக்கம் அல்ல. வாழ்க்கையில் ஒழுக்கம். பெண் என்பது ஒரு உறவு மட்டும் அல்ல. ஒரு மரியாதை. இன்றைய Gen-Z தலைமுறையின் பெற்றோர்கள் கூட, உங்கள் செயல்-பேச்சுகளை பார்த்து மெதுவாக கவலைப்படத் தொடங்கியுள்ளனர். நன்றாக வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு அரசியல் இயக்கம், தலைவரின் தனிப்பட்ட ஒழுக்கம் காரணமாக தேய்ந்து போகக் கூடாது. அது உங்களுக்கு தெரியவில்லையா? அல்லது தெரிந்தும் புறக்கணிக்கிறீர்களா? ’பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய் மாமனாக சீர் கொடுப்பேன்’ என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். அது நல்ல எண்ணம்.
ஆனால் அடுத்த குழந்தைக்கு தாய் மாமனாக இருப்பதற்கு முன், பெற்ற குழந்தைகளுக்கு தகப்பனாக இருப்பது முக்கியம் இல்லையா? நீங்கள் சீர் கொடுக்க வேண்டாம் தலைவா இளைஞர்களை சீர் குலைக்காமல் இருப்பதே சிறந்தது. ஒரு தலைவர் சமூகத்திற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஒரு தலைவர் உருவாக்கும் கலாச்சாரம் தான் ஒரு தலைமுறையை உருவாக்கும். TVK ல் உங்களுடன் இணைந்து பயணிக்கும் நான் அக்கறையுடன் எச்சரிக்க வருகிறேன். மோசமான ட்ரெண்ட் செட்டராக மாறிவிடாதீர்கள். தமிழக இளைஞர்களுக்கு நல்ல முன்னுதாரணமாகவே இருங்கள்” என அதில் கடுமையாகச் சாடியுள்ளார். கட்சியின் உள்ளேயே எழுந்துள்ள இந்த விமர்சனம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.