மூன்று இளைஞர்கள் உயிரிழந்தனர் pt desk
தமிழ்நாடு

ராணிப்பேட்டை | இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்து - மூன்று இளைஞர்கள் பலி

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்த நிலையில், ஒருவர் படுகாயங்களுடன் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

PT WEB

செய்தியாளர்: நாராயணசாமி

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே உள்ள கீழ் வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த வெற்றிவேல் (23) அவரது நண்பர் பிரேம் (23) ஆகியோர் சேந்தமங்கலத்தில் இருந்து தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அதேபோல் ஆட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (21) மற்றும் அவருடைய நண்பர் ரஞ்சித் (21) ஆகியோர் ஆட்டுப்பக்கத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து இருந்து சேர்ந்தமங்கலம் நோக்கி வந்துள்ளனர்.

accident

அப்பொழுது ஆலப்பாக்கம் அருகே இருசக்கர வாகனங்கள் இரண்டும் அதிவேகமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், வெற்றிவேல், தினேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ரஞ்சித் மற்றும் பிரேம் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த நெமிலி காவல்துறையினர் இரு உடல்களையும் மீட்டு, அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து படுகாயங்களுடன் இருந்த இருவரையும் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பிரேம் உயிரிழந்துள்ளார். ரஞ்சித் தொடர் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து நெமிலி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.