ரமலான் வாழ்த்து முகநூல்
தமிழ்நாடு

அமைதி, வளம், மகிழ்ச்சி பெருகட்டும்... அரசியல் தலைவர்களின் ரமலான் வாழ்த்து!

வாழ்த்துக்களை பார்க்கலாம்!

PT WEB

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, 0 முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

2025-ம் ஆண்டில், இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும் இந்த ஆண்டு மார்ச் 31, திங்கட்கிழமை ரமலான் பண்டிகையைக் கொண்டாடுகிறது. ஏனெனில், இன்று ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 30-ம் தேதி பிறை நிலவு காணப்படுகிறது. ஈத் அல்-பித்ர் அல்லது ஈத்-உல்-பித்ர் என்பது முஸ்லிம்களால் அனுசரிக்கப்படும் ஒரு புனிதமான மற்றும் மிக முக்கியமான மத இஸ்லாமிய பண்டிகைகளில் ஒன்றாகும், இது புனித ரமலான் மாதத்தின் முடிவைக் குறிக்கிறது, இது ரோசா என்று அழைக்கப்படுகிறது.

இந்நிலையில், ரமலான் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ள, முதல்வர் ஸ்டாலின்,

“ அறம் பிறழா மனித வாழ்வை வலியுறுத்துவது ரமலான் திருநாள். பசித்தோருக்கு உணவிடவும், சமத்துவ - சகோதர உணர்வுடன் அனைவரையும் நேசிக்கவும் வழிகாட்டியவர் நபிகள் பெருமான். அவர் போதித்த நெறியில் நோன்பு கடமைகளை நிறைவேற்றியுள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு, உளமார்ந்த வாழ்த்துகள்.” என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்," பிறை கண்டு பெருநாள் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களின் வாழ்வு, என்றென்றும் வளர் பிறையாக ஒளிரவேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், ’ரமலான் திருநாள் இஸ்லாமியர்களுக்கு ஏற்றத்தையும், இன்பத்தையும் தருவதாக அமையட்டும்’ எனக் கூறியுள்ளார்.

உலகில் அமைதி, வளம், மகிழ்ச்சி உள்ளிட்டவை பெருகுவதற்கு பாடுபட, இந்த நன்னாளில் உறுதியேற்போம் என, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். அதேபோல், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், ரமலான் திருநாளில் அமைதி, ஆன்மிக உயர்வு, அருள், பசுமை நிறையட்டும் என வாழ்த்தியுள்ளார்.