உள் வாங்கிய கடல்
உள் வாங்கிய கடல்  pt wep
தமிழ்நாடு

ராமேஸ்வரம் : பல இடங்களில் உள் வாங்கிய கடல்.. மீண்டும் சுனாமியா? அச்சத்தில் மீனவர்கள்!

PT WEB

சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாகத் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையத்தினால் வெள்ளை அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கடல் கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இதன் காரணமாகக் கடந்த மூன்று நாட்களாக மன்னார் வளைகுடா கடல் பிராந்தியத்தில் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்கச்செல்லக்கூடாது என மீன்வளத்துறையினரால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை முதல் பாம்பன் அருகே உள்ள சின்னப்பாலம், தோப்புக்காடு முந்தல்முனை, தரவைதோப்பு, உள்ளிட்ட பகுதிகளில் திடீரென வழக்கத்துக்கு மாறாக சுமார் ஒரு கி.மி தூரம் முதல் 500 மீட்டர் தொலைவிற்குக் கடல் உள்வாங்கியது. இதனால் கடலுக்கு அடியில் உள்ள உயிரினங்கள், கடல் பாசிகள் வெளியில் தெரிந்தது. அடிக்கடி இந்த நிகழ்வு நடைபெறுவதால் மீனவர்கள் படகுகளைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்றதால் பெரும் இழப்புகள் தவிர்க்கப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

சுனாமிக்குப் பின்பு குறிப்பாகத் தனுஷ்கோடி, மண்டபம் பாம்பன் ராமேஸ்வரம் தெற்கு வாடி குந்துகால் உள்ளிட்ட பகுதிகளில் கடல் உள்வாங்குவதும், கடல் சீற்றத்துடன் காணப்படுவதும், நீரோட்டம் மாறுவதும் அடிக்கடி நிகழ்வதால், பாரம்பரிய மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாம்பன் அருகே தோப்புக்காடு, முந்தல்முனை, சின்னப்பாலம், தரவைதோப்பு, ஆகிய 4 மீனவ கிராமங்களில் சுமார் ஒரு கி.மீ தூரமும் 500 மீட்டாருக்கும் மேலாகக் கடல் வழக்கத்திற்கு மாறாக உள்வாங்கியதால் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் தரை தட்டியது.மேலும் கடல் உள்வாங்கியதால் மீன்பிடி தொழில் பாதிக்கப் பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாகப் பேசிய மீனவர்கள், " சுனாமிக்குப் பின்பு ஒரு சில இடங்களில் கடல் உள்வாங்குவது வாடிக்கையாக இருந்தாலும் அடிக்கடி கடல் உள் வாங்குவதால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பியுள்ள நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறோம். இது போன்ற காலங்களில் அரசு எங்களுக்கு நிவாரண உதவிவழங்க வேண்டும். கடல் இயல்பு நிலைக்குத் திரும்பினால் மட்டுமே மீன் பிடிக்கச் செல்ல முடியும்" என்றனர்.

இது போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் பருவநிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்து மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.