செய்தியாளர்: அ.ஆனந்தன்
விருத்தாசலத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சாமி தரிசனம் செய்வதற்காக சுற்றுலா வேனில் 15 பேர் இன்று அதிகாலை ராமேஸ்வரம் நோக்கி வந்துள்ளனர். அப்போது சுற்றுலா வேன் உச்சப்புளி அடுத்த நதிபாலம் விளக்கு அருகே வந்த போது எதிரே வந்த கார், சுற்றுலா வேன் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரை ஒட்டி வந்த கீழக்கரையைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன் (29) மற்றும் சுற்றுலா வேனில் வந்த 12 வயது மகாலட்சுமி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார், விபத்தில் காயமடைந்த 10க்கும் மேற்பட்டோரை உடனடியாக மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்த இருவரது உடலும் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் இந்த விபத்து குறித்து உச்சிப்புளி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.