இந்தியாவில் அதிகரிக்கும் இதயநோய் மருந்துகள் விற்பனை..!
இந்தியாவில் இதய நோய்கள், கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு தொடர்பான மருந்துகள் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 30 ஆயிரத்து 483 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனையாகியுள்ளன. இது 50% அதிகரிப்பு ஆகும், கடந்த ஓராண்டில் மட்டும் இதய கோளாறுகள் சிகிச்சைக்கான மருந்துகள் விற்பனை 11% அதிகரித்துள்து. இதய செயலிழப்பை தடுக்கும் மருந்துகள் மட்டும் 5 ஆண்டுகளில் 83% அதிகரித்துள்ளது.
கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறை, போதிய தூக்கமின்மை, உடல் பருமன், சர்க்கரை நோய், மன அழுத்தம் போன்றவை இதய நோய் அதிகரிக்க காரணமாவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் கடந்த 5 ஆண்டுகளாக 40 வயதுக்கு கீழானவர்களுக்கும் இதய நோய்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் 20% நோயாளிகள் 40 வயதுக்கு கீழானவர்கள் என்ற புள்ளிவிவரமும் அச்சுறுத்துவதாக உள்ளது.
உலகளவில் இதயம் தொடர்பான பிரச்சினைகளால் ஆண்டுக்கு ஒரு கோடியே 80 லட்சம் பேர் இறப்பதாகவும் இதில் ஐந்தில் ஒருவர் இந்தியாவில் மட்டும் இறப்பதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்தியாவில் ஒட்டுமொத்த மருந்துகள் சந்தை கடந்த ஓராண்டில் மட்டும் 19 ஆயிரத்து 711 கோடி ரூபாயை எட்டியுள்ளதாகவும் இது முந்தைய ஆண்டை விட 7.8% வளர்ச்சி என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் பெரும்பகுதி இதயநோய்கள் தொடர்பான மருந்துகள் மூலம் கிடைத்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.