மீனவர்களின் வலையில் சிக்கிய கூறல் மீன்கள் pt desk
தமிழ்நாடு

ராமநாதபுரம் | மீனவர்களின் வலையில் சிக்கிய கூறல் மீன்கள் -ரூ.1.27 லட்சத்திற்கு ஏலம் போனதால் மகிழ்ச்சி

பாம்பன் விசைப்படகு மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை கூறல் மீன்: இரண்டு மீன்கள் ரூ.1.27 லட்சத்துக்கு ஏலம் போனதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

PT WEB

செய்தியாளர்: அ.ஆனந்தன்

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் மன்னார் வளைகுடா கடற்பகுதியிலிருந்து நேற்று 90-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். மீன்பிடித்து விட்டு நேற்று மீனவர்கள் கரை திரும்பினார்கள். இதில், மீனவர் வலையில் 22 கிலோ மற்றும் 29 கிலோ எடையில் இரண்டு பெண் கூறல் மீன்கள் சிக்கின. சுமார் 51 கிலோ எடை கொண்ட இந்த இரண்டு மீன்கள் கிலோ ரூ. 2,500 வீதம், ரூ.1,லட்சத்து 27,500க்கு ஏலம் போனது.

இந்த கூறல் மீனை உணவுக்காக பயன்படுத்துவதில்லை. கூறல் மீனின் வயிற்று பகுதியில் காற்றுப்பை ரப்பர் டியூப் போன்ற வடிவத்தில் நெட்டி காணப்படும். இந்த நெட்டியை பீர், ஒயின் போன்ற மது பானங்கள் மற்றும் ஜெல்லி மிட்டாய் போன்றவைகளை சுவையாகவும், கெட்டுப் போகாமலும் இருக்க பயன்படுத்துகின்றனர். கிழக்கு ஆசிய நாடுகளில் இந்த நெட்டிகளைக் கொண்டு விலை உயர்ந்த சூப் தயாரிக்க பயன்படுத்துவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

மீனவர்கள் வலையில் சிக்கிய இரண்டு கூறல் மீன்கள் 1.27 லட்சத்துக்கு ஏலம்போனது மீனவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.