செய்தியாளர்: அ.ஆனந்தன்
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சொர்ணராஜன். இவரது மகள் சண்முகப் பிரியா, (13) உறவினர் ஹரி சூர்ய பிரகாஷ் (14) ஆகிய இருவரும் பத்ரகாளி அம்மன் கோயில் விழாவிற்குச் சென்று விட்டு, வீட்டிற்குச் செல்ல, கிழக்கு கடற்கரை சாலை ஓரமாக நின்றிருந்தனர்.
அப்போது ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கிச் சென்ற சொகுசு கார், கட்டுபாட்டை இழந்து இருவர் மீதும் மோதியுள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே சண்முக பிரியா உயிரிழந்தார். சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹரி சூர்ய பிரகா{ம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய கர்நாடக மாநிலம், மாண்டியாவைச் சேர்ந்த கார் டிரைவர் சிவா, (45) என்பவர் மீது சாயல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.