கட்சியை தன்னிடமிருந்து பறித்து அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் திருடி கொடுத்துள்ளதாகவும், தேர்தல் ஆணையத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து இதற்கான வேலைகள் தற்போதே வேகம் பிடித்து வருகின்றன. தவிர, இதர கட்சிகளும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், பாமகவும் அதில் சமீபகாலமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே பாமகவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவருடைய மகனும் அக்கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக தனித்தனியாக நிர்வாகிகள் நியமனம், ஆலோசனை, பொறுப்புகள், கூட்டங்கள் என இம்மோதல் போக்கு ஒவ்வொரு நாளும் புதுப்புது உச்சத்தை எட்டியது. இதையடுத்து, பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் அன்புமணி செயல்பட்டார் என அவர் மீது 16 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அன்புமணி ராமதாஸ் பாமகவிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைமை தொடர்பான உட்கட்சி மோதலில், கட்சியை நிர்வகிக்கும் அதிகாரம் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தரப்புக்கே உள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் (ECI)தெரிவித்திருந்தது. இதையடுத்து, கட்சியை தன்னிடமிருந்து பறித்து அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் திருடி கொடுத்துள்ளதாகவும், தேர்தல் ஆணையத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
சூழ்ச்சியால் தன்னிடமிருந்து கட்சியை பறித்துக்கொண்டது திருட்டு செயல் என்றும் தெரிவித்துள்ள ராமதாஸ், 46 ஆண்டு காலம் உழைத்த தன்னிடமிருந்து பாமகவை பறித்துகொண்டது உயிர் பறிபோன செயல் என்றும், கண்ணீர் வடிப்பதாகவும், கலங்கி நிற்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் மோசடியை கண்டித்து, டிசம்பர் 2ஆம் தேதி சென்னையிலும், டிசம்பர் 4ஆம் தேதி டெல்லியிலும் நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் ராமதாஸ் அறிவித்துள்ளார்.