தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், பல்வேறு கருத்துக் கணிப்புகளையும் பொய்யாக்கி கட்சி ஆரம்பித்த 2 ஆண்டுகளில் 108 என்ற பெரும்பான்மை இடங்களில் வென்றார் தவெகவின் தலைவர் விஜய். எனினும், அக்கட்சி ஆட்சியமைக்க போதிய பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 5 தொகுதிகளில் வென்றிருந்த காங்கிரஸ் தவெகவுக்கு முதல் கட்சியாக ஆதரவளித்தது. இதைத்தொடர்ந்து, விசிக, கம்யூனிஸ்ட்கள் மற்றும் ஐயூஎம்எல் ஆதரவளித்த நிலையில், தவெக ஆட்சியமைத்திருக்கிறது. முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளார்.
இந்தச்சூழலில் தான், சட்டப்பேரவைத் தேர்தலில் நடந்த தோல்விக்குப் பிறகு, கடந்த செப்டம்பர் மாதம் பாஜகவின் மேலிடப்பொருப்பாளராக இருந்த அரவிந்த் மேனன் மாற்றப்பட்டார். தற்போது, பாஜக தேசிய துணைத் தலைவர், ராம் மாதவ் அப்பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசியிருக்கும் அவர், முதல்வர் விஜய் காங்கிரசிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் 6 மாதங்களுக்கு முன்புதான் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் போன்ற கட்சியை அவர் நம்பியிருப்பது முட்டாள்தனமானது. விஜய் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். தற்போது காங்கிரஸ் கட்சி தங்களுடன் இருப்பதால் விஜய் மகிழ்ச்சியாக இருக்கலாம்; ஆனால், அவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேறொரு இடத்தில் அதிக அரசியல் ஆதாயம் கிடைக்கும் என்று தெரிந்தால், காங்கிரஸ் கட்சி உடனடியாக அங்கு சென்றுவிடும். அக்கட்சிக்கென்று தனிப்பட்ட பலம் இல்லாததால் எப்போதும் மற்றொரு கட்சியின் ஆதரவைச் சார்ந்தே செயல்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், இதற்கு உதாரணமாக, முன்னாள் தமிழக முதல்வர் காமராஜருக்கும், முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கும் இடையே இருந்த அரசியல் உறவை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திரா காந்தியை அரசியலில் உயர்த்துவதற்கு காமராஜர் முக்கியப் பங்காற்றிய நிலையில், பின்னர் அவர் கட்சியில் ஓரங்கட்டப்பட்டதாக ராம் மாதவ் குறிப்பிட்டுள்ளார்.