ஒன்றரை மணி நேரம் சந்திப்பு: ஆளுநர் அர்லேகர் - மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியது என்ன?
தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் இன்று சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் 30 நிமிடங்கள் நீடித்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலைச் சம்பவங்கள், சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து மத்திய அரசு ஆளுநரிடம் அறிக்கை கேட்டிருப்பதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. இதன் தொடர்ச்சியாகவே ஆளுநர் அர்லேகர் டெல்லி சென்று அமித்ஷாவைச் சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்தச் சூழலில் நடைபெற்றுள்ள இன்றைய சந்திப்பு கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகு டெல்லி சென்றிருந்த ஆளுநர் அர்லேகர், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரைச் சந்தித்துப் பேசியிருந்தார். அப்போது இந்தச் சந்திப்புகள் ஒவ்வொன்றும் சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வரை மட்டுமே நடைபெற்றதாகக் கூறப்படும் நிலையில், தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் மட்டும் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
குறிப்பாக, தமிழகத்தில் தீபாவளி நாளில் நடைபெற்ற தொடர் கொலைகள், தேனியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கொல்லப்பட்ட சம்பவம் உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள், மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலவரம் மற்றும் இதுதொடர்பாக தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் அறிக்கை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்னதாக, சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் ஆளுநரிடம் கேட்டிருந்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இத்தகைய பின்னணியில், பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடனான சந்திப்புகளைக் காட்டிலும் மத்திய உள்துறை அமைச்சருடனான சந்திப்பு நீண்ட நேரம் நடைபெற்றிருப்பதும், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு விவகாரம் தொடர்பாக விரிவான ஆலோசனை நடைபெற்றிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்களும், மத்திய அரசின் திட்டங்களை மாநிலத்தில் செயல்படுத்துவது மற்றும் மாநில அரசுக்கு மத்திய அரசு அமைப்புகள் உதவுவது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படும் நிலையில் இது அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
