தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும், தவெக தலைவர் விஜயின் அரசியல் வருகை தமிழ்நாட்டில் கூட்டணிக் கணக்கை மாற்றிப் போடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஆளும் திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும், புதிய கட்சிகளை இழுக்கவும் தற்போதுள்ள கூட்டணியை தக்க வைக்கவும் போராடி வருகின்றன.
2026 ஏப்ரல் 2-ஆம் தேதியோடு மாநிலங்களவையில், திமுகவைச் சேர்ந்த கனிமொழி, என்.வி.என். சோமு, திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என். ஆர். இளங்கோ மற்றும் அதிமுகவை சேர்ந்த தம்பிதுரை, அதிமுக கூட்டணியைச் சேர்ந்த ஜி.கே. வாசன் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதில் 4 இடங்கள் திமுகவும், 2 இடங்களை அதிமுகவும் வெல்லும் வாய்ப்பு அதிகம். ஆகவே இந்த 6 இடங்களை வைத்தே கூட்டணியை இறுதி செய்யும் வேலைகளில், திமுகவும் அதிமுகவும் இறங்கியுள்ளன.
அதன்படி, தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா இடத்தைக் கொடுத்து கூட்டணியில் இழுக்க திமுகவும், அதிமுகவும் முயலக் கூடும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். ராஜ்யசபா இடத்தோடு, அதிக எம்எல்ஏ தொகுதிகளைத் தரும் வலுவான கூட்டணியில் இடம்பிடிக்க தேமுதிக முயற்சி மேற்கொள்ளும் . அதன் காரணமாகவே, எந்தப் பக்கமும் சாயாமல் இருந்து வரும் தேமுதிக தனது கூட்டணி நிலைப்பாட்டை அடுத்த மாதம் கடலூர் மாநாட்டில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேமுதிக அல்லது பாமகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுத்து, இரண்டில் ஏதாவது ஒரு கட்சியை கூட்டணிக்குள் கொண்டுவர திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு அணிகளாக பிரிந்து கிடக்கும் பாமகவில், ராமதாஸ் தரப்பு திமுகவிடமும், அன்புமணி தரப்பு அதிமுகவிடமும் நெருக்கம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து, அன்புமணி தரப்பு விஜய் பக்கமும் திரும்ப வாய்ப்பு இருப்பதாக அரசியல் ஆய்வர்கள் ஆருடம் சொல்கிறார்கள். மாநிலங்களவை இடத்துடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்வது பாமகவின் வழக்கமாகவும் இருப்பதால், இந்த ராஜ்யசபா தேர்தலும் பாமகவின் கூட்டணிக்கு இறுதி வடிவம் கொடுக்கும்.
மற்றொரு பக்கம் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் அல்லது விசிகவுக்கு, திமுக மாநிலங்களவை சீட் கொடுத்தோ அல்லது அந்த கட்சிகள் கோருவது போல் கூடுதல் இடங்களைக் கொடுத்தோ திருப்திப் படுத்துமா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. எது எப்படியோ, சட்டமன்றத் தேர்தல் நேரத்திலேயே, ராஜ்யசபா தேர்தலும் சதிராட்டம் போட உள்ளதால், தமிழகத்தில் தேர்தல் கூட்டணியை உறுதி செய்வதில் அதன் பங்கு முக்கியமாக இருக்கப்போவது உறுதி.