ராஜன் செல்லப்பா, ஓபிஎஸ், செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார் pt web
தமிழ்நாடு

ஒரு காலத்தில் மதுரையின் முகம்.. இந்தி எதிர்ப்பு காலத்திலிருந்து அரசியல்.. யார் இந்த ராஜன் செல்லப்பா?

அதிமுகவில், நம்பர் 2-வாக பல ஆண்டுகள் ஓ.பி.எஸ் வலம் வந்திருந்தாலும், அவருக்கே முன்னோடியாக இருந்தவர் ராஜன் செல்லப்பா. யார் அவர்? அவர் கடந்து வந்த பாதை என்ன? விரிவாகப் பார்ப்போம்.

இரா.செந்தில் கரிகாலன்

ராஜன் செல்லப்பா

“அதிமுகவில் இணைய விரும்பினால் ஓ.பன்னீர்செல்வம் 6 மாதம் காலம் அமைதியாக இருக்க வேண்டும்” என அதிமுக அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா கருத்துத் தெரிவித்திருந்த நிலையில், “எனக்காக யாரும் பரிந்துபேசத் தேவையில்லை” என எதிர்வினை ஆற்றியிருக்கிறார் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். அதிமுகவில், நம்பர் 2-வாக பல ஆண்டுகள் ஓ.பி.எஸ் வலம் வந்திருந்தாலும், அவருக்கே முன்னோடியாக இருந்தவர் ராஜன் செல்லப்பா. யார் அவர்? அவர் கடந்து வந்த பாதை என்ன? விரிவாகப் பார்ப்போம்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகேயுள்ள சாக்கிலிப்பட்டியைப் பூர்விகமாகக் கொண்டவவர் ராஜன் செல்லப்பா. மாணவப் பருவத்திலிருந்தே, அரசியல் ஆர்வமுடைய ராஜன் செல்லப்பா பள்ளியில் படிக்கும்போதே, இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் மிகத் தீவிரமாகக் கலந்துகொண்டார். கல்லூரிக் காலங்களில் திராவிட மாணவ முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராகச் செயல்பட்டதோடு, சென்னை சட்டக் கல்லூரியில் படிக்கும்போது, மாணவரணிச் செயலாளராகவும் இருந்தார். மிகத் தீவிரமான எம்.ஜி.ஆர் ரசிகரான ராஜன் செல்லப்பா, எம்.ஜி.ஆர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டபோது, மாணவர்களுடன் சென்று அவர் வீட்டின் முன்னாள் தர்ணா இருந்து எம்.ஜி.ரைக் கட்சி ஆரம்பிக்க வலியுறுத்தினார்.

அரசியல் பயணம்

அதிமுக தொடங்கப்பட்டப் பிறகு, மதுரை மாவட்ட மாணவரணிச் செயலாளராக இருந்த ராஜன் செல்லப்பா, 1980 நாடாளுமன்றத் தேர்தலில், திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் மாயத்தேவரிடம் தோல்வியடைந்தார்.

பிறகு, எஸ்.டி.எஸ் அதிமுகவிலிருந்து பிரிந்து, நமது கழகத்தைத் தோற்றுவித்தபோது, அதில் இணைந்தார். அந்தக் கட்சியின் சார்பில், திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு வெறும் 3658 வாக்குகள் மட்டுமே பெற்றார். எஸ்.டி.எஸ் நமது கழகத்தை அதிமுகவில் இணைக்க ராஜன் செல்லப்பாவும் அதிமுகவில் இணைந்தார். பின்னர், 1989-ல் அதிமுக ஜெ, ஜா என இரு அணிகளாகப் பிளவுபட்ட்டிருந்தபோது, ஜெ அணி சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்தக் காலகட்டத்தில், கட்சியிலும் ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட செயலாளர், மாநில இளைஞரணிச் செயலாளர் உள்ளிட்டப் பொறுப்புகளை வகித்து வந்தார். 1992 முதல் 1998 வரை ராஜ்யசபா உறுப்பினராகப் பணியாற்றினார் ராஜன் செல்லப்பா.

பின்னர், திருநாவுக்கரசர் தலைமையில், இரட்டை இலையை முடக்க கையெழுத்திட்டதற்காக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் ராஜன் செல்லப்பா.

ஓபிஎஸ்-க்கு வாய்ப்பு கொடுத்தவர்

2001-ல் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். தொடர்ந்து, 20-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், மதுரை மேயராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2013-ம் ஆண்டில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளராகவும் ஆனார். தொடர்ந்து, 2016 தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆனார். தொடர்ந்து, 2021 தேர்தலில், திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்துவருகிறார்.

ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜூ

தற்போது மதுரை அதிமுகவின் முகங்களாக இருக்கும் முன்னாள் அமைச்சர்கள், ஆர்.பி.உதயக்குமார், செல்லூர் ராஜு ஏன் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் எனப் பலருக்கும் முன்பே மதுரை அதிமுகவின் முகமாக இருந்தவர் ராஜன் செல்லப்பா. ஆனால், கட்சியிலிருந்து இருமுறை வெளியேறியதால் இதுவரை அமைச்சராகும் வாய்ப்புக் கூட அவருக்கு அமையவில்லை. அதுமட்டுமல்ல, “நான் மாநில இளைஞரணிச் செயலாளராக இருந்தபோது, பெரியகுளம் நகராட்சித் தலைவராக இருந்த ஓ.பி.எஸ்ஸை நகர இளைஞரணி தலைவராக்கினேன்” என அவரே ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார்.

யாரும் பரிந்து பேசத்தேவையில்லை

ஆரம்பத்தில் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்திருந்தாலும், தற்போது மிகத்தீவிரமான எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராக இருந்துவருகிறார் ராஜன்செல்லப்பா. இந்தநிலையில்தான், தற்போது ஓ.பி.எஸ் கட்சியில் இணைவது குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் ஓ.பி.எஸ்.

ஓ.பன்னீர்செல்வம், ராஜன் செல்லப்பா

முதலில் பேசிய ராஜன் செல்லப்பா, “ஓபிஎஸ் ஆறு மாத காலம் அதிமுகவிற்கு எந்தவித இடையூறும் செய்யாமல் அமைதியாக இருந்தால், அவரை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து தாங்கள் கழகப் பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியிடம் பேசி நடவடிக்கை எடுப்போம்” எனப் பேசியிருந்தார். அதற்குப் பதிலளித்துள்ள ஓ.பி.எஸ், “பிரிந்து கிடக்கின்ற அதிமுக சக்திகள், இணைய வேண்டும் என்றுதான் நான் சொன்னேன். என்னை அழைத்துக் கொண்டு போய், யாரிடமோ சேர்க்க வேண்டும் என்று இதுவரை நான் சொன்னதே கிடையாது. சொல்லவும் மாட்டோம். ராஜன் செல்லப்பா இதைப் புரிந்துகொள்ள வேண்டும். எனக்காக யாரும், பரிந்து பேச தேவையில்லை” எனக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.