நீட் உள்ளிட்ட தேர்வுகளில் முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் கடந்த ஜூன் 20-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து, கடந்த ஜூலை 20-ம் தேதி போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியில் ஈடுபட முயன்றபோது, இப்போராட்டம் வன்முறையாக மாறியது.
இளைஞர்கள் மீது டெல்லி காவல்துறை நடத்திய தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் வீசுதல் போன்ற தாக்குதலால், 6 வயது சிறுவன் உட்பட 100-க்கு மேற்பட்ட இளைஞர்கள் காயமடைந்தனர். இதையடுத்து, டெல்லியில் போராடி வருபவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் தொடங்கின.
இந்தச்சூழலில் தான், இளைஞர்களின் தொடர்ச்சியான போராட்டங்களால் ஜூலை 26-ம் தேதி மத்திய கல்வித் துறை அமைச்சர் பதவியை தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார்.
இதற்கிடையில், மத்திய அரசு கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தை தவறாக கையாண்டு மாணவர்கள் மீது தேவையற்ற தாக்குதல்களை நடத்தியிருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டி வருகிறார். தொடர்ந்து, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மக்களவையில் மாணவர்கள் மீதான தாக்குதல்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிக்க வேண்டும் எனவும் தெரிவித்து வருகிறார்.
இந்தநிலையில் தான், இந்து ஆங்கில நாளிழிதலில் “பொறுப்பற்றவரா? அல்லது திறைமை இல்லையா? என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். இன்று வெளியாகியுள்ள அந்தக் கட்டுரையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா கையாண்ட விதம் குறித்து கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கட்டுரையில், ”அமைதியான முறையில் கேள்விகளை எழுப்பிய இளம் தலைமுறையினர் மீது தடியடி, கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் உருண்டைத் தோட்டாக்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பெண் போராட்டக்காரர்கள் மற்றும் சிறுவர்கள் மிகக் கொடூரமாகக் தாக்கப்பட்டதில் பலருக்குப் பலத்த காயங்களும் எலும்பு முறிவுகளும் ஏற்பட்டுள்ளன.
பாராளுமன்றத்திற்கு அருகிலேயே நடைபெற்ற இந்த வன்முறைச் சம்பவத்திற்குப் பிறகும், உள்துறை அமைச்சர் அமித் ஷா இது குறித்து நாடாளுமன்றத்தில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. எதிர்க்கட்சிகள் எழுப்பிய எந்த விவாதக் கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. டெல்லி காவல்துறையும் அதிரடிப் படையும் நேரடியாக உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றன.
இந்த வன்முறைக்கு இரண்டு காரணங்கள் மட்டுமே இருக்க முடியும்: ஒன்று, இந்தத் தாக்குதலுக்கு அவரே உத்தரவிட்டிருக்க வேண்டும் அல்லது இவ்வளவு பெரிய தாக்குதல் நடந்தது அவருக்குத் தெரியாமலேயே இருந்திருக்க வேண்டும். முதல் நிலை உண்மையென்றால் அவர் இந்த குற்றத்திற்குப் பொறுப்பானவர்; இரண்டாவது நிலை உண்மையென்றால் அவர் தனது பதவிக்குத் திறமையற்றவர்.
மாணவர்கள் மீதான இந்த அநியாயத் தாக்குதலுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த அநீதிக்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படும் வரை போராட்டம் தொடரும்” எனத் தெரிவித்திருக்கிறார்.