ராகுல் காந்தி - முக ஸ்டாலின் இடையே விழுந்த விரிசல் web
தமிழ்நாடு

முற்றும் விரிசல்| வாழ்த்தில் ‘அண்ணன்’ இல்லை.. ராகுல் பாணியிலேயே ரிப்ளை கொடுத்த ஸ்டாலின்!

திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையேயான முரண்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கான பிறந்தநாள் வாழ்த்தில் அண்ணன்(Brother) என்ற வார்த்தையை ராகுல் காந்தி பயன்படுத்தவில்லை..

Rishan Vengai

திமுக-காங்கிரஸ் இடையே விரிசல் அதிகரித்துள்ள நிலையில், ராகுல் காந்தி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்தில் 'அண்ணன்' என்ற வார்த்தையை தவிர்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளித்த ஸ்டாலினும் ராகுல் பாணியிலேயே ரிப்ளை செய்திருப்பது விரிசல் முற்றிருப்பதையே காட்டுகிறது.

திமுக-காங்கிரஸ் இடையே விரிசல் இருந்துவருவதாக சொல்லப்பட்டுவரும் நிலையில், நேற்று திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ராகுல் காந்தி, வாழ்த்து செய்தியில் அண்ணன்(Brother) என்ற வார்த்தையை தவிர்த்தது சர்ச்சையாக மாறியது.

ஸ்டாலின், ராகுல் காந்தி

இந்தசூழலில் முதல்வர் ஸ்டாலினும் தன்னுடைய ரிப்ளையில் ராகுல் பாணியிலேயே சம்பிரதாயமாக ஒரு பதிலை பதிவிட்டுள்ளார். இது திமுக-காங்கிரஸ் இடையேயான விரிசில் அதிகரிப்பதையும், எது நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற முடிவில் திமுக இருப்பதையுமே எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது.

10ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த கட்சி உறவு..

கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து திமுக காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்த நிலையில், 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது இந்த கூட்டணி முடிவுக்கு வந்து காங்கிரஸ் அந்த தேர்தலை தனியே சந்தித்தது. அதனைத் தொடர்ந்து மீண்டும் 2016-ம் ஆண்டு இரு கட்சிகளும் கூட்டணி அமைத்த நிலையில், தற்போது வரை இந்த கூட்டணி தொடர்ந்து வருகிறது.

ராகுல் - ஸ்டாலின்

இந்த சூழலில் திமுக தலைவர் கலைஞர் குடும்பத்துக்கும் சோனியாகாந்தி குடும்பத்துக்கும் நெருக்கம் அதிகரித்தது. 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்களே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க தயங்கிய நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக பகிரங்கமாக அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து ராகுல்காந்தி மற்றும் ஸ்டாலின் இடையே உறவு அதிகரித்து, ஸ்டாலின் எனது மூத்த தலைவர் என்று ராகுல் காந்தி சொல்லும் அளவு சென்றது. இருவரும் அடுத்தவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும்போது சகோதரர் என்றே வாழ்த்து தெரிவிப்பர்.

அண்ணன் என்ற வார்த்தை இல்லை..

இந்த சூழலில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அதற்கு ராகுல் காந்தி சமூகவலைத்தளம் மூலம் தெரிவித்த வாழ்த்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் நல்ல ஆரோக்கியம், வலிமை மற்றும் நீண்ட ஆயுள் பெற்று தமிழக மக்களுக்கு சேவை செய்ய வாழ்த்துக்கள் என்று கூறப்பட்டுள்ளது. வழக்கமாக முதல்வர் ஸ்டாலினை சகோதரர் என கூறும் ராகுல் காந்தியின் பதிவில் இந்த முறை சகோதரர் என்ற வார்த்தை இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தசூழலில் ராகுல் காந்தியின் வாழ்த்துக்கு பதிலளித்திருக்கும் முக ஸ்டாலினும், ”உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி” என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார். ராகுலை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினும் ‘சகோதரர்’ என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை.

இரண்டு கட்சிகளின் தலைவர்களிடையே இப்படியான விரிசல் விழுந்துள்ளது, திமுக-காங்கிரஸ் இடையேயா விரிசல் முற்றும் நிலைக்கு சென்றிருப்பதையே காட்டுகிறது. காங்கிரஸ் செயல்பட்டால் அதிருப்தி அடைந்திருக்கும் திமுக, என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற முடிவில் இருப்பது தெளிவாகியுள்ளது.