பிறந்தநாள் வாழ்த்தால் சர்ச்சை.. ராகுல் தவிர்த்த அந்த வார்த்தை! அம்பலமானதா திமுக-காங். முரண்பாடு?
ராகுல் காந்தியின் முக ஸ்டாலினுக்கான பிறந்தநாள் வாழ்த்தில் எப்போதும் பயன்படுத்தப்படும் வார்த்தை இல்லாதது, திமுக-காங்கிரஸ் இடையேயான முரண்பாட்டை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது. இது அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து திமுக காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்த நிலையில், 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது இந்த கூட்டணி முடிவுக்கு வந்து காங்கிரஸ் அந்த தேர்தலை தனியே சந்தித்தது. அதனைத் தொடர்ந்து மீண்டும் 2016-ம் ஆண்டு இரு கட்சிகளும் கூட்டணி அமைத்த நிலையில், தற்போது வரை இந்த கூட்டணி தொடர்ந்து வருகிறது.
இந்த சூழலில் திமுக தலைவர் கலைஞர் குடும்பத்துக்கும் சோனியாகாந்தி குடும்பத்துக்கும் நெருக்கம் அதிகரித்தது. 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்களே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க தயங்கிய நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக பகிரங்கமாக அறிவித்தார்.
பிறந்தநாள் வாழ்த்தால் சர்ச்சை..
அதனைத் தொடர்ந்து ராகுல்காந்தி மற்றும் ஸ்டாலின் இடையே உறவு அதிகரித்து, ஸ்டாலின் எனது மூத்த தலைவர் என்று ராகுல் காந்தி சொல்லும் அளவு சென்றது. இருவரும் அடுத்தவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும்போது சகோதரர் என்றே வாழ்த்து தெரிவிப்பார்.
இந்த சூழலில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அதற்கு ராகுல் காந்தி சமூகவலைத்தளம் மூலம் தெரிவித்த வாழ்த்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் நல்ல ஆரோக்கியம், வலிமை மற்றும் நீண்ட ஆயுள் பெற்று தமிழக மக்களுக்கு சேவை செய்ய வாழ்த்துக்கள் என்று கூறப்பட்டுள்ளது. வழக்கமாக முதல்வர் ஸ்டாலினை சகோதரர் என கூறும் ராகுல் காந்தியின் பதிவில் இந்த முறை சகோதரர் என்ற வார்த்தை இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு பிறந்தநாள் வாழ்த்தின்போது, எனது சகோதரரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு, ஆட்சியில் பங்கு என்ற காங்கிரஸ் தொடர்ந்து கூறிவரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் கோரிக்கைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மறுப்பு தெரிவித்தார். இதனால் இரு கட்சிகள் இடையே அதிருப்தி நிலவிய நிலையில், அதன் வெளிப்பாடாகவே சகோதரர் என்ற வார்த்தையை ராகுல்காந்தி குறிப்பிடவில்லை என்று கூறப்படுகிறது. இது அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

