ராகவா லாரன்ஸ் x
தமிழ்நாடு

”மக்களை நாய்களுடன் ஒப்பிட்டு பேசவில்லை.. தவறாக பரப்புகின்றனர்” - ராகவா லாரன்ஸ்

மக்களை நாய்களுடன் ஒப்பிட்டு பேசியதாக ராகவா லாரன்ஸ் மீது விமர்சனம் வைக்கப்பட்டுவருகிறது.

Rishan Vengai

ராகவா லாரன்ஸ் சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் கூறிய நாய்கள் குறித்த ஒப்பீடு, மக்களை நாய்களுடன் ஒப்பிட்டதாக சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதற்கு எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்த அவர், மக்கள் தன் தாய்க்குச் சமம், அவர்களை நாய்கள் என்று கூறவில்லை, புதிய சூழலைப் புரிந்துகொள்ள நேரம் தேவை என்பதையே எடுத்துக்கூறினேன் எனத் தெளிவுபடுத்தினார்.

சமீபத்தில் தன்னுடைய அரசியல் வருகை குறித்து வெளிப்படுத்திய நடிகரும் சமூக சேவையாளருமான ராகவா லாரன்ஸ், பெரிய அளவில் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதே எனது ஒரே எண்ணம் என்றும், தான் அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என்ற கருத்துகளை மக்களாகிய ரசிகர்களாகிய நீங்கள் கூறுங்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

ராகவா லாரன்ஸ்

தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய ராகவா லாரன்ஸ், ரோட்டில் இருக்கும் தெரு நாய்கள் கூட நம்மை பார்த்தால் கத்தும். ஒரு சில தெரு நாய்கள் பிஸ்கட் சாப்பிடாது. பிரியாணி தான் சாப்பிடும், அசைவம் தான் சாப்பிடும். அதற்கு பிடித்தவாறு உணவு கொடுக்க வேண்டும். தெரு நாய்களுக்கு இப்படி என்றால் நாட்டையே நம்பி அவர்களிடம் கொடுத்துள்ளீர்கள். மாற்றம் வேண்டும் என நினைத்து அவர்களுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்தீர்கள். தற்போது மாற்றம் வந்துள்ளது. அவர்களுக்கு கால அவகாசம் கொடுங்கள்” என பேசியிருந்தார்.

அவருடைய இந்த பேச்சு மக்களை நாய்களுடன் ஒப்பிட்டதாக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்தசூழலில் தன்னுடைய பேச்சு தவறாக பரப்பப்படுவதாக விளக்கம் கொடுத்துள்ளார் ராகவா லாரன்ஸ்.

எக்ஸ் தளத்தில் பதிவொன்றை பதிவிட்டிருக்கும் லாரன்ஸ், “எனது சமீபத்திய செய்தியாளர் சந்திப்பு தொடர்பாக ஏற்பட்டுள்ள ஒரு தவறான புரிதலைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

எனது ரசிகர்களும் மக்களும் என் தாய்க்குச் சமமானவர்கள் என்று நான் எப்போதும் கூறி வருகிறேன். மக்களை நான் 'நாய்கள்' என்று குறிப்பிட்டதாகச் சிலர் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்; இது முற்றிலும் பொய்யானது மற்றும் தவறான புரிதலை ஏற்படுத்தக்கூடியது.

நான் சொல்ல வந்தது என்னவென்றால், ஒரு புதிய வீட்டிற்குக் குடிபெயரும்போது, ​​அந்தச் சூழலைப் புரிந்துகொள்வதற்கும், அங்குள்ள நாய்கள், அவற்றின் பழக்கவழக்கங்கள் மற்றும் அவை எதை உண்ண விரும்புகின்றன என்பதை அறிந்துகொள்வதற்கும் நேரம் எடுக்கும் என்பதுதான். நான் ஆழமாக மதிக்கும் மற்றும் என் தாய்க்குச் சமமாகக் கருதும் மக்களை 'நாய்கள்' என்று அழைக்கும் அளவுக்குக் கல்நெஞ்சம் படைத்தவன் நான் அல்ல.

ஒரு புதிய சூழலைப் புரிந்துகொண்டு அதற்கேற்பப் பழகுவதற்கு நேரம் தேவைப்படும் என்பது பற்றித்தான் நான் பேசினேனே தவிர, மக்களைக் குறித்து நான் அவ்வாறு குறிப்பிடவில்லை. எனவே, அந்த முழு வீடியோவையும் பார்த்து, நான் உண்மையில் என்ன சொல்ல வந்தேன் என்பதைப் புரிந்துகொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் புரிதலுக்கும் ஆதரவுக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார்.