தமிழ்நாடு முதல்வர் விஜயின் சிறப்பு அதிகாரியாக ரிக்கி ரத்தன் பண்டிட் என்பவர் நியமிக்கப்பட்டதற்கு தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்பு அலை எழுந்த நிலையில், அவரது நியமனத்தை விஜய் தலைமையிலான தமிழக அரசு திரும்பப்பெற்றது.
இந்நிலையில் தமிழக அரசியலில் சலசலப்பை உண்டாக்கிய ரத்தன் பண்டிட் யார்..? அவர் தவெகவிற்காகவும், விஜய்க்காகவும் என்ன செய்தார்? என்பது குறித்து இங்கே பார்க்கலாம்..
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியே ரிக்கி ரத்தன் பண்டிட்டின் சொந்த ஊராகும். ஆரம்பத்தில் சிறிய அளவில் ஜோதிடம் பார்த்துக்கொண்டிருந்த இவருக்கு அதிமுகவின் முக்கிய தலைவர்களின் தொடர்பு கிடைத்துள்ளது. அவர்கள் மூலம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அறிமுகமாகி அவரின் ஆஸ்தான ஜோதிடராக மாறியுள்ளார்.
அதன் பின்னர், டெல்லிக்கு இடம்பெயர்ந்த இவர் தனக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கு மூலம் இந்திய அரசியல் வாதிகளுக்கும் ஜோதிடம் பார்த்துவந்துள்ளார். மஹாராஷ்டிரா அரசியலில் செல்வாக்கு பெற்ற அம்மாநில முன்னாள் முதல்வர் சரத் பவார் குடும்பத்தின் ஆஸ்தான ஜோதிடராக இருந்துள்ளார்.
பின்னர் சிங்கப்பூர் சென்ற அவர், அங்கு தனியே ஒரு ஜோதிட நிறுவனத்தை தொடங்கி, வி.ஐ.பிக்களுக்கு ஆன்லைன் வழியாக ஜோதிடம் பார்க்க தொடங்கியுள்ளார். இந்த சூழலில் நடிகர் விஜயின் தொடர்பு இவருக்கு கிடைத்துள்ளது.
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கினால் அவர் நிச்சயம் ஆட்சியை பிடிப்பார் என்று இவர் கூறியதன் அடிப்படையிலே விஜய் கட்சி தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. கட்சியின் பெயரில் V என்ற வார்த்தை இருக்க வேண்டும் என்றும், முதல் மாநாடு V-யில் தொடங்கும் இடத்தில் நடக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதன் அடிப்படையிலேயே விஜயின் கட்சி பெயர் தமிழக வெற்றிக் கழகம் என்றும், கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்றது என்றும் கூறப்படுகிறது. அதோடு விஜய் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளை தேர்வு செய்ததில் இவர் பங்கு இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், திருச்செந்தூர், வேளாங்கண்ணி, சீரடி சாய்பாபா போன்ற இடங்களுக்கு விஜய் சென்றதிலும் இவரின் பங்கு உள்ளது.
விஜய் முதல்வரானதில் இவர் பங்கு அதிகம் இருந்ததன் காரணமாக இவரின் ஆலோசனையை பெற இவருக்கு அரசு பதவி கொடுக்கப்பட்டதாக பார்க்கப்படுகிறது. இந்தசூழலில் தான் சட்டசபை வரை எதிர்ப்பலை எழுந்த நிலையில், ரத்தன் பண்டிட்டின் நியமனம் திரும்பப்பெறப்பட்டுள்ளது.