கனிமவளக் கொள்ளை தடுக்கப்படாவிட்டால், மக்களைத் திரட்டி போராடப் போவதாக கூறியவர் இன்று உயிரோடு இல்லை... யார் இவர், என்ன நடந்தது என்று பார்க்கலாம்...
இப்படி கனிமவளக் கொள்ளைக்கு எதிராக, அக்கறையாகவும் ஆவேசமாகவும் பேசியவர், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வெங்களூரு கிராமத்தைச் சேர்ந்த ஜெகபர் அலி... அதிமுகவின் முன்னாள் ஒன்றிய கவுன்சிலரான இவர், திருமயம் பகுதியில் அனுமதியின்றி செயல்படும் கல்குவாரிகள் குறித்து புகார் அளித்திருந்தார்.
தங்களது புகார் மனுக்கள், அரசு அலுவலகத்தில் இருந்து கசிய விடப்பட்டதாகக் கூறிய நிலையில், கடந்த வெள்ளியன்று, பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு திரும்பியபோது, வாகனம் மோதியதில், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்கு அச்சுறுத்தல் இருந்த நிலையில், தனது கணவர் விபத்தில் உயிரிழந்தது குறித்து ஜெகபர் அலியின் மனைவி கேள்வி எழுப்பியுள்ளார். கணவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மரியம் அளித்த புகாரின் பேரில், குற்றச்சாட்டுக்கு உள்ளான நிறுவனங்களின் உரிமையாளர்கள் ராசு, ராமையா, லாரி உரிமையாளர் முருகானந்தம் மற்றும் அவரது ஓட்டுநர் முருகேசன் ஆகியோர் மீது, திருமயம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
முருகானந்தம் உள்பட 4 பேரைக் கைது செய்துள்ளனர். விசாரணையில், சட்டவிரோத கல்குவாரி தொடர்புடைய தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள், திட்டமிட்டு சாலை விபத்தை ஏற்படுத்தி, ஜெகபர் அலியைக் கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. இந்த விவகாரத்தில் வேறு யாரேனும் சம்பந்தப் பட்டிருக்கிறார்களா என்ற கோணத்தில் விசாரணை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.