54 பேருக்கு தீவிர சிகிச்சை pt desk
தமிழ்நாடு

புதுக்கோட்டை | பிறந்தநாள் விழாவில் உணவு சாப்பிட்ட ஒருவர் உயிரிழப்பு - 54 பேருக்கு தீவிர சிகிச்சை

புதுக்கோட்டை அருகே பிறந்தநாள் விழாவில் கேக் மற்றும் உணவு சாப்பிட்ட ஒருவர் உயிரிழந்த நிலையில், பாதிப்புக்கு உள்ளாகியுள்ள 54 பேருக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

PT WEB

செய்தியாளர்: சுப.முத்துப்பழம்பதி

புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் அருகே உள்ள குருங்களூர் வேளாணி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யராஜ். இவரது மகன் தேவரக்ஷனின் முதலாவது பிறந்தநாள் விழா நேற்று மதியம் நடந்துள்ளது. இந்த விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கேக் உடன் சேர்த்து சிக்கன், மட்டன் முட்டை உள்ளிட்ட அசைவ விருந்தும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு உணவு உட்கொண்ட முப்பதுக்கும் மேற்பட்டோருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்கள் ஏம்பல் உள்ளிட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், சிகிச்சைக்கு செல்லாமல் உடல்நலக் குறைவோடு வீட்டில் இருந்த கருப்பையா என்பவர் இன்று உயிரிழந்தார். இதனால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்த நிலையில் பிறந்தநாள் விழாவில் உணவு உட்கொண்டவர்கள் பலரும் மருத்துவமனைகளில் குவியத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து ஏம்பல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 30 பேர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதேபோல், உடல் நலம் பாதிப்புக்கு உள்ளான பத்து பேர் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் புதுக்கோட்டையில் சிகிச்சையில் உள்ள நான்கு குழந்தைகள் மற்றும் 9 பெண்கள் உட்பட 30 பேருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அதேபோல் பிற மருத்துவமனையில் உள்ள நபர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.