செய்தியாளர்: சுப.முத்துப்பழம்பதி
புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூரில் மத்திய தொல்லியல் துறையின் திருச்சி வட்ட கண்காணிப்பாளரும், கொடும்பாளூர் அகழாய்வு இயக்குநருமான அனில்குமார் தலைமையில், துணை இயக்குநர் முத்துக்குமார் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் கடந்த ஜனவரி மாதம் 3ஆம் தேதி அகழாய்வு பணியை தொடங்கினர்.
இதையடுத்து மூவர் கோயிலில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவிலும், முசுகுந்தேஸ்வரர் கோயிலில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவிலும் உள்ள அக்ரஹாரம் மேட்டுப் பகுதியில் 10 மீட்டர் நீள, அகலத்தில் 6 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு செய்யப்பட்டு வருகிறது. கடந்த மூன்று நான்கு மாதங்களாக அங்கு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் நூறாண்டுகளுக்கு முந்தைய கருங்கல் சுவர் கண்டறியப்பட்டது.
இந்நிலையில், தற்போது 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்க அணிகலனான மணி, 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பானை ஓடுகள் அதற்கு முந்தைய காலகட்டத்தின் பாசி மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கொடும்பாளூரில் கடந்த நான்கு மாதங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், தங்க அணிகலன் தற்போது கிடைத்திருப்பது தொல்லியல் ஆய்வாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.