நெடுங்குழைக்காதர் கோயில் தேர்த் திருவிழா - கோவிந்தா... கோஷத்துடன் வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
செய்தியாளர்: பே.சுடலைமணி செல்வன்
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நவதிருப்பதி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் நவதிருப்பதிகளில் ஏழாவதாகவும் அமைந்துள்ளது தென்திருப்பேரை அருள்மிகு மகர நெடுங்குழைக்காதர் திருக்கோயில்.
பல்லேறு சிறப்புகள் கொண்ட இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேப்போல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா நாட்களில் காலையும் மாலையும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதிஉலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று திருத்தேரோட்டம் நடந்தது. இதற்காக அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு அபிஷேக தீபாராதனை நடந்தது.
இதைத் தொடர்ந்து உற்சவர் ஸ்ரீநிகரில் முகில்வண்ணன் திருத்தேருக்கு எழுந்தருளினார். அங்கு கற்பூர தீபாராதனை காண்பிக்க தேர் முன் நின்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோபால என கோஷமிட்டபடி திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.