புதுச்சேரி தவெக மக்கள் சந்திப்பு கூட்டம் pt
தமிழ்நாடு

”விஜய் எங்களுக்கு என்ன பண்ணபோறார்.. அராஜகமா இருக்கு..” - புதுச்சேரி உள்ளூர்வாசி ஆதங்கம்

புதுச்சேரியில் இன்று தவெக மக்கள் சந்திப்பு கூட்டம் நடக்கவிருக்கும் நிலையில், காவல்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததோடு, பொதுவழிகளையும் தடுத்துள்ளதால் உள்ளூர்வாசிகள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

Rishan Vengai

புதுச்சேரியில் விஜய் பங்கேற்கும் கூட்டத்திற்காக பல்வேறு இடங்களில் போக்குவரத்து தடைகள் ஏற்படுத்தப்பட்டதால் உள்ளூர்வாசிகள் அதிருப்தி அடைந்தனர். காவல்துறையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக மக்கள் வழக்கமான பாதையில் செல்ல முடியாமல், சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

புதுச்சேரியில் இன்று நடைபெறும் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கிறார். உப்பளம் பழைய துறைமுக மைதானத்தில் கூட்டம் நடக்கவிருக்கும் சூழலில், நான்கரை ஏக்கர் நிலத்தில் திடல் அமைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி தவெக மக்கள் சந்திப்பு கூட்டம்

அத்துடன் காவல்துறையினரின் அறிவுறுத்தலின்படி, குடிநீர், கழிவறை, வாகன நிறுத்துமிடம், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகளையும் தவெகவினர் செய்து வருகின்றனர். காவல் துறை சார்பில் பாதுகாப்பு பணியில் 700 போலீசார்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்தசூழலில் காவலர்கள் அதிகமான கெடுபிடிகளை விதித்துள்ளதால் உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டனர். பல்வேறு இடங்களில் எப்போதும் செல்லும் வழிகள் அடைக்கப்பட்டதால் உள்ளூர்வாசிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

புதுச்சேரி தவெக மக்கள் சந்திப்பு கூட்டம்

புதுச்சேரி குடியிருப்பு வாசி ஒருவர் தன்னுடைய வீட்டிற்கு அருகே இருக்கும் தெருவில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, சுற்றி செல்ல சொன்னதால் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அப்போது பேசிய அவர், “விஜய் இங்க வந்து எங்களுக்கு என்ன செய்ய போறாரு.. அவர் ஒரு ஆளுனு எப்பவும் போயிட்டு வர சாலையை பிளாக் பண்ணி வச்சிருக்கீங்க. பக்கத்துல இருக்க வீட்டுக்கு சுத்திட்டு போக சொல்றீங்க. நேத்துல இருந்து ரொம்ப அநிநாயம் பண்றீங்க. இதெல்லாம் ரொம்ப அராஜகமா இருக்கு” என கூறிவிட்டு சென்றார். மேலும் பலர் வேலைக்கு செல்லும் நேரத்தில் சுற்றிச் செல்ல சொன்னால் எப்படி நேரத்திற்கு செல்லமுடியும் என போலீஸாருடன் வாக்குவாதம் செய்தனர்..