ஞானவேல் ராஜா வீட்டில் நகை கொள்ளை
ஞானவேல் ராஜா வீட்டில் நகை கொள்ளை புதிய தலைமுறை
தமிழ்நாடு

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டில் நகை கொள்ளை... தன்னை சந்தேகப்பட்டதால் பணிப்பெண் விபரீத முடிவு!

PT WEB

செய்தியாளர் - அன்பரசன்

பத்து தல, மெட்ராஸ் உட்பட பல்வேறு திரைப்படங்களை தயாரித்து முன்னணி தயாரிப்பாளராக இருந்து வருபவர், ஞானவேல் ராஜா. இவரது வீடு சென்னை தி.நகர் ஜெகதீஸ்வரன் தெருவில் உள்ளது. ஞானவேல் ராஜாவின் மனைவி நேகா. கடந்த 13- ம் தேதி நேகா தங்கள் வீட்டிலிருந்த தங்க நெக்லஸை தேடியிருக்கிறார். அப்போதுதான் அது காணாமல் போய் இருந்தது அவருக்கு தெரியவந்துள்ளது.

ஞானவேல் ராஜா

இதையடுத்து அதிர்ச்சியடைந்த நேகா, தங்கள் வீட்டில் வேலை செய்து வந்த தி.நகரைச் சேர்ந்த லட்சுமி என்பவரிடம் விசாரித்திருக்கிறார். அச்சமயத்தில் லட்சுமி முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவத்திற்கு அடுத்த நாள் லட்சுமி வேலைக்கு வரவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதையடுத்து இது குறித்து நேகா தனது கணவர் ஞானவேல்ராஜாவிடம் தெரிவித்துள்ளார். இதன் பிறகு ஞானவேல்ராஜாவின் மேலாளர் தினேஷ் குமார் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் குறித்து போலீசார் லட்சுமியை நேற்று நேரில் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, தான் தங்க நகைகளை திருடவில்லை என கூறியுள்ளார். விசாரணைக்கு பிறகு லட்சுமியை இன்று காலை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றுகூறி போலீசார் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

மாம்பலம் காவல் நிலையம்

இந்த நிலையில் இன்று காலை லட்சுமி மாம்பலம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகவில்லை. இதனால் போலீசார் வீட்டிற்கு சென்று விசாரித்த போது லட்சுமி தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து லட்சுமி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், லட்சுமியின் மகள் திவ்யா மாம்பலம் காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, அவரது மனைவி நேகா, ஊழியர்கள் அன்சாரி மற்றும் மேலாளர் தினேஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்திருக்கிறார்.

குறிப்பாக தனது தாய் லட்சுமி மீது அவர்கள் பொய் புகார் கொடுத்து இருப்பதாகவும், தனது தாய் நகைகளை திருடவில்லை என கூறியபோதும் அன்சாரி என்பவர் தனது தாய்க்கு போன் செய்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும், இதனால் மன உளைச்சலில் இன்று காலை தன் தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

லட்சுமியின் மகள் திவ்யா அளித்த புகார்

ராயப்பேட்டை அரசு மருத்துவமனை ஐசியூ-வில் லட்சுமி சிகிச்சை பெற்று வரும் நிலையில் இரு தரப்பிலிருந்தும் புகார் வந்துள்ளதால் மாம்பலம் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.