house loan
house loan file image
தமிழ்நாடு

தேனி: ‘வீட்டுக்கடன் செலுத்தவில்லை’ கடனை திருப்பி செலுத்திய பின்பும் அத்துமீறும் தனியார் நிதிநிறுவனம்

யுவபுருஷ்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள அன்னை இந்திரா நகர் காலனியில் வசித்து வருபவர் பிரபு. இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் சமையல்காரராக பணியாற்றி வருகிறார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் வசிக்கும் வீட்டை தேனியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்து ரூ. 3 லட்சம் கடன் பெற்றுள்ளார்.

ஒருவழியாக, வாங்கிய கடனுக்கு முறையாக தவணை செலுத்தி முடித்துவிட்டு, ஆவணங்களை தரும்படி தனியார் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டுள்ளார் பிரபு. ஆனால் அவர்கள் மறுத்துள்ளனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய பிரபு, “ஏற்கெனவே ஒருமுறை தாமதமாக நாப் மாதத்தவணை கட்டிய போது, நிதி நிறுவனத்தினர் என்னுடைய இருசக்கர வாகனத்தை எடுத்துகொண்டு சென்றுவிட்டனர். திருப்பி தர கேட்டதற்கு மறுத்ததால், காவல் நிலையத்தில் புகார் அளித்து போலீசார் மூலம் வாகனத்தை மீட்டேன். இதனை மனதில் வைத்துதான் இப்போது இந்த சதிவேலையை செய்துள்ளனர்” என்றார்.

பிரபு இன்னமும் ரூ1.50 லட்சம் வரை கடன் தொகை பாக்கி செலுத்த வேண்டி உள்ளதாகவும், அவற்றை செலுத்தி விட்டு ஆவணங்களை வாங்கி செல்லும் படியும் நிதி நிறுவனம் கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில், பிரபு வேலைக்கு சென்றிருந்த நேரத்தில், அவரது வீட்டுக்கு சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர்கள், அவர் வீட்டுச் சுவரில் ‘வீட்டுக்கடன் செலுத்தவில்லை’ என்று பெரிய எழுத்துக்களில் பெயிண்டால் எழுதியுள்ளனர். மேலும், வீட்டிலிருந்த பிரபுவின் குடும்பத்தினரையும் மிரட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த பிரபு, வாங்கிய கடனுக்கு பணம் செலுத்திய பிறகும் மிரட்டி வரும் தனியார் நிதி நிறுவனத்தின் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆவணங்களை மீட்க வேண்டும் என்றும் போலீஸாரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.