திமுக சட்டத்துறை மூன்றாவது மாநில மாநாடு, சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்றது. அம்மாநாட்டிற்கு வாழ்த்து கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூட்டாட்சித் தத்துவத்தையும் மதச்சார்பின்மையையும் சீர்குலைக்கும் வகையில், பா.ஜ.க. அரசு கொண்டுவரும் பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல், வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா ஆகியவற்றைக் கடுமையாக எதிர்த்து நாடாளுமன்றத்தில் போராடி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் கொண்டு வரப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்களை, திமுக சட்டத்துறை தொடர்ந்து எதிர்த்து வருவதாகவும், புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள, ஓய்வுபெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில், ஒரு நபர் கமிட்டி அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பாஜக அரசால், அரசியல் சட்டத்துக்கு ஆபத்து வந்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
ஜனநாயகம், மதச்சார்பின்மை, சோஷலிசம் போன்ற அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களைத் தகர்க்கும் முயற்சியில், மோடி அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், அதற்கு எதிராக i-n-d-i-a கூட்டணி, அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத்தை உயர்த்திப் பிடிப்பதாகவும் முதலமைச்சர், தான் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தின் 75ஆவது தினத்தையொட்டி, அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் அரசியல் சட்டத்தின் முகவுரையை வாசிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.