மத்திய கிழக்கு போர் சூழ்நிலை காரணமாக எரிவாயு விலை ஏற்றம் தொடர, இந்தியாவில் வீட்டு மற்றும் வணிக எல்.பி.ஜி சிலிண்டர் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மூண்ட போர், இன்னும் ஒரு முடிவை எட்டாமல் தொடர்ந்து வருகிறது. இதன் தாக்கம் இந்தியச் சமையலறைகளில் நேரடியான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்விளைவாக, தொடக்கத்தில் 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக எல்.பி.ஜி சிலிண்டர் விலை 60 ரூபாய் உயர்த்தப்பட்டு 928 ரூபாய் 50 காசுகளாக விற்பனை செய்யப்பட்டுவருகிறது.
பின்னர் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை உயர்த்தப்படாது என்று மத்திய அரசு தெரிவித்த நிலையில், வணிக சிலிண்டர் விலை பல மடங்கு அதிகரித்தது. ஒரே நாளில் 990 வரை உயர்த்தப்பட்டது மட்டுமில்லாமல், 3 மாதத்தில் 81% வரை விலை உயர்த்தப்பட்டது. இதனால் விரைவில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையும் உயர்த்தப்படும் அபாயம் இருந்தது.
இந்தசூழலில் தான் 928 ரூபாய்க்கு விற்கப்பட்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை இன்று அதிரடியாக 29 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போதைய விலை உயர்வின் படி சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ சமையல் சிலிண்டரின் விலை ரூ.29 உயர்ந்து ரூ.957.50க்கு விற்கப்படுகிறது. வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ஜூன் 1இல் ரூ.46 அதிகரித்து ரூ.3,283க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.